வணிகம்

ஐடிஎப்சி மியூச்சுவல் பண்டை வாங்குகிறது பந்தன்

webteam

ஐடிஎப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை பந்தன் பைனான்ஸியல் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கொல்கத்தாவை தலைமையாக கொண்டு செயல்படும் பந்தன் வங்கியின் தாய் நிறுவனம் இது. பந்தன் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் உடன் இணைந்து சிங்கப்பூரை சேர்ந்த சில நிறுவனங்களும் இணைந்து வாங்க இருப்பதாக தெரிகிறது. ஐடிஎப்சி மியுச்சுவல் பண்டின் மதிப்பு 4,500 கோடி ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

ஐடிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனம் பங்குச்சந்தைக்கு எழுதிய கடிதத்தில் இதனை தெரிவித்திருக்கிறது. ஐடிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தில் 60 சதவீத பங்குகள் பந்தன் வசம் இருக்கும். ஜிஐசி மற்றும் சிரிஸ் கேபிடல் ஆகிய நிறுவனங்கள் வசம் தலா 20 சதவீத பங்குகள் இருக்கும்.



இந்த இணைப்புக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் இதுவரை நடந்த மிகப்பெரிய கையகப்படுத்துதல் இதுவாக இருக்கும். ரிசர்வ் வங்கி, செபி உள்ளிட்ட அமைப்புகளின் அனுமதிக்கு 12 மாதங்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் 9-வது பெரிய நிறுவனம் ஐடிஎப்சி மியூச்சுவல் பண்ட். இந்த நிறுவனம் ரூ.1.21 லட்சம் கோடி  சொத்துகளை கையாளுகிறது. இந்த நிறுவனம் 2000ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஐடிஎப்சி மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை இன்வெஸ்கோ மியூச்சுவல் பண்ட், வார்பர்க் பின்கஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் வாங்குவதற்கான முயற்சியில் இருந்ததாக தெரிகிறது. பந்தன் நிறுவனம் இதற்கு முன்பாக குரு பைனான்ஸ் நிறுவனத்தை வாங்கியது.