வணிகம்

வாகன விற்பனை சரிவு: டீலர்களுக்கு உதவும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!

நிவேதா ஜெகராஜா

கடந்த மே மாதம் இந்தியா முழுவதும் பொதுவான முழுமுடக்கம் அறிவிக்கப்படவில்லையே தவிர, பெரும்பாலான மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடுகள் இருந்தது. இப்போதும்கூட அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட முக்கியமான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீடிக்கிறது. அதனால் மே மாதத்தில் வாகன விற்பனை கடுமையாக சரிந்ததாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனையும் சரிந்திருக்கிறது. இரு சக்கரம், நான்கு சக்கரம் மற்றும் வர்த்தக வாகனங்கள் என அனைத்து பிரிவிலும் வாகன விற்பனை சரிந்திருக்கிறது. அதிலும் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில் வாகன விற்பனை கடுமையாக சரிந்திருக்கிறது. ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி, டாடா, டிவிஎஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா டிராக்டர் என அனைத்து பிரிவிலும் விற்பனையில் பெரும் வீழ்ச்சி இருக்கிறது.

இந்த நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய டீலர்களை மீட்க முன்வந்திருக்கின்றன. பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய டீலர்களுக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களால் முடிந்த சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளன.

தற்போது தேங்கியுள்ள வாகனங்களுக்கு கூடுதல் தவணைக் காலம், வட்டியில் சலுகை, காப்பீடு, பணியாளர்களுக்கான சம்பளத்தில் உதவி, தடுப்பூசிக்கு ஆகும் செலவை திருப்பி வழங்குவதல் உள்ளிட்ட சில நிதி சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளன.

பெரும்பாலான டீலர்களுக்கு விற்பனை இல்லை என்பதால், பணப்பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. உடன் வாடகை, பணியாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட நிரந்தர செலவுகள் டீலர்களுக்கு இருக்கிறது. அதனால் உபரித்தொகையில் தொகையில் இருந்து ஊக்கத்தொகை வழங்குவதாக மாருதி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் டீலர்களுக்கு நிதி உதவிகளை இவர்கள் இதுவரை வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் கடனுக்கு வாங்கிய வாகனங்களுக்கான காலக்கெடு ஜூன் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல டாடா மோட்டார் நிறுவனமும் சில பணிகளை மேற்கொண்டிருக்கிறது. விற்பனையாகாத வாகனுங்களுக்கான நிலுவை தொகையை செலுத்துவதற்கு 45 நாட்கள் வரை அவகாசம் வழங்கி இருக்கிறது. அதேபோல டீலர்களின் பணியாளர்களுகான ஒரு லட்ச ரூபாய் காப்பீடு வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.