ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பாண்டில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
மக்களை கவரும் செல்போன்கள், மேக் என எல்லாவற்றிலும் போட்டி நிறுவனங்கள் ஆயிரம் வந்தாலும் ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கு இன்று வரை தனி மதிப்பு உள்ளது. அதன்விலை அதிகம் இருந்தாலும் தயாரிப்பில் இருக்கும் சிறப்பம்சங்கள் ஆப்பிள் நிறுவன பொருட்களை வாங்க மக்களை ஆர்வம் காட்டச் செய்கிறது. இந்நிலையில் நடப்பாண்டில் ஆப்பிள் இந்தியா நிறுவனத்தின் மொத்த வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
கடந்தாண்டில் மொத்த வருவாய் 11,704.32 கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் மொத்த வருவாய் 12 சதவீதம் ஏற்றம் கண்டு ரூபாய் 13,097.64 கோடியாக உள்ளது. அதேசமயம் நிகர லாபம் இரண்டு மடங்கை தாண்டியுள்ளது. கடந்தாண்டு நிகர லாபம் ரூபாய் 373.38 கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டு நிகர லாபம் ரூபாய் 896.33 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்தாண்டு விற்பனைக்கு வந்த ஐபோன் 6 மற்றும் 5S-ஐ காட்டிலும் நடப்பாண்டு வெளிவந்த ஐபோன் 7 உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்தே நிகர லாபம் அதிகரிப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அதேசமயம் ஜியோ நிறுவனம் நடப்பாண்டில் ரூபாய் 22,947.27 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.