வணிகம்

‘ஜியோ மார்ட்’ஐ சமாளிக்க உள்ளூர் கடைகள்..! - அமேசான் புதிய திட்டம்

‘ஜியோ மார்ட்’ஐ சமாளிக்க உள்ளூர் கடைகள்..! - அமேசான் புதிய திட்டம்

webteam

இந்தியாவின் 100 நகரங்களில் உள்ளூர் விற்பனை கடைகளை திறக்க அமேசான் முன்வந்துள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் உள்ளது. மற்றொரு அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தின் தலைமையில் இயங்கும் ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கும், அமேசான் நிறுவனத்திற்கும் இந்தியாவில் கடும் ஆன்லைன் வர்த்தகப் போட்டி நிலவிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இரண்டிற்கும் சவாலாக ஃபேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ மார்ட்டை மேம்படுத்துகிறது. இதனால் வர்த்தகப் போட்டியில் ஜியோ மார்ட்டை சமாளிக்க முடிவு செய்துள்ள அமேசான் நிறுவனம் இந்தியாவில் உள்ளூர் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, இந்தியாவின் 100 நகரங்களில் அமேசான் நிறுவனம் நேரடி விற்பனை கடைகளை திறக்க முன்வந்துள்ளது. இதற்காக 5000 சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்களிடம் வரவேற்பை அந்நிறுவனம் பெற்றுள்ளது. அத்துடன் இதற்காக அண்மையில் ரூ.10 கோடியை அந்நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.

முதற்கட்டமாக அகமதாபாத், கோவை, டெல்லி, ஃபரிதாபாத், ஹைதராபாத், இந்தூர், ஜெய்பூர், லக்னோவ், மும்பை, புனே, சஹரான்பூர், சூரத் மற்றும் சில நகரங்களில் கடைகளை திறக்கவுள்ளன. இங்கே வாகன உதிரிபாகங்கள், புத்தகங்கள், ஃபர்னிச்சர்ஸ், வீட்டு அலங்காரப் பொருட்கள், நகைகள், சமையலறை சாதனங்கள், விளையாட்டுப் பொருட்கள் மற்றும் பொம்மைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை பதிவு செய்த அதே தினத்திலோ அல்லது அதிகபட்சமாக அடுத்த தினத்தில் பொருட்களை டெலிவெரி செய்திட வேண்டும் என அமேசான் அறிவுறுத்தியுள்ளது.