வணிகம்

அமேசான் பிரைம் வீடியோ உறுப்பினர் கட்டணம் அதிகரிப்பு... எந்த ப்ளானுக்கு எவ்வளவு?

PT WEB

பிரைம் வீடியோ ஓடிடி தளத்தின் மெம்பர்ஷிப் கட்டணம் அதிகரிப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம்.

ஆன்லைன் விற்பனையிலும் முன்னணி நிறுவனமாக திகழும் அமேசான், இந்தியாவின் ஓடிடி தளத்திலும் அமேசான் பிரைம் வீடியோ என்ற பெயரில் முன்னணியாக இருந்து வருகிறது. இந்த இரண்டு சேவைகளையும் இணைத்து தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரே சேவையாக கொடுக்கும் வகையில் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை செயல்படுத்தி வருகிறது. அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பில் உறுப்பினர் ஆவதன் மூலம், ஆன்லைன் அமேசான் பொருட்களை மற்ற வாடிக்கையாளர்களைவிட முன்னதாகவே வாங்க முடிவதுடன், ஓடிடி சேவைகளையும் பெற முடிகிறது.

மொத்தமாக அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் மூலமாக, அமேசான் நிறுவனத்தின் வலைதளம் மற்றும் மொபைல் செயலி, அமேசான் பிரைம் வீடியோ, அமேசான் பிரைம் மியூசிக் போன்ற சேவைகளை பெற முடியும். இந்தியாவில் மற்ற ஓடிடி தளங்களின் சந்தாதாரர்களை விட, அமேசான் பிரைம் வீடியோவுக்கு சந்தாதாரர்கள் அதிகம். அதற்கு காரணம் அதன் குறைந்த கட்டணம்தான். ஆனால், தற்போது அமேசான் நிறுவனம் பிரைம் மெம்பர்ஷிப்பிறகான கட்டணத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணம் ரூ.999 என்ற அளவில் உள்ளது. தற்போது இதனை 500 ரூபாய் உயர்த்தி ரூ.1499 என்ற அளவுக்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதிகாரபூர்வ விலையை தனியார் செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ள அமேசான், " வருடாந்திர பிரைம் சந்தாவின் புதிய விலை ரூ.1,499 ஆகவும், மாதாந்திர பிரைம் சந்தாவின் புதிய விலை ரூ.129 - ரூ.179 ஆகவும், 3 மாத பிரைம் சந்தாவின் புதிய விலை ரூ.329 என்பதில் இருந்து ரூ.459 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமேசான் விடுத்துள்ள அறிக்கையில், " இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதில் இருந்து பிரைம், உறுப்பினர்களுக்கு அளிக்கும் மதிப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஷாப்பிங், சேமிப்பு, பொழுதுபோக்கு என பிரைம் அதன் உறுப்பினர்களுக்கு சேவை அளித்து வருகிறது. உறுப்பினர்களுக்கு இந்த சேவையை இன்னும் மதிப்புள்ளதாக்க நாங்கள் முதலீடுகளை அதிகரித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமேசான் பிரைம் 2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் உறுப்பினர் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது கட்டணம் 499 ரூபாய் என்ற அளவில் இருந்து பின்னர் அது 999 ரூபாயாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.