வணிகம்

மேலும் உயர்ந்த நூல் விலை - பின்னோக்கி நகரும் பின்னலாடை தொழில்; ஓர் அலசல்

Veeramani

நூல் விலை கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் அதிகரித்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பின்னலாடை துறை சந்திக்கும் சவால்கள் என்ன?, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 60 சதவீதம் திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 15 மாதங்களாக பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை படிப்படியாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 120 முதல் 170 வரை விலை உயர்த்தப்பட்டு 340 முதல் 390 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 200 ருபாய்க்கு விற்கப்பட்ட நூல் இன்றைய நிலவரப்படி 395 ருபாயாக உள்ளது. 95% விலை உயர்வு கண்டுள்ள நூலால் பின்னலாடை தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

நுாற்பாலைகளை பொருத்தவரை பஞ்சு விலையை அடிப்படையாக கொண்டு மாதம்தோறும் 1-ம் தேதி நுால் விலையை நிர்ணயிக்கின்றன. அவ்வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அனைத்து ரக நூல்களும் ரூ. 50 உயர்த்தப்பட்டது தொழில்துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த ஓராண்டில் ரூ. 100 ஏறியிருந்த நூல் விலை, நவ. மாதத்தில் தடாலடியாக அனைத்து ரகங்களுக்கும் ரூ. 50 ஏறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.10 குறைக்கப்பட்ட நூல் விலை இந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 ரூபாய் அதிகரித்தது. பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் மத்திய அரசின் சார்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாதது தொழில்துறையினரை ஏமாற்றம் அடைய வைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

உலகம் முழுவதும் பின்னலாடையை திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்த காலம் போய் , இன்று பங்களாதேஷ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய ஆரம்பித்திருப்பது ஆபத்தான தொடக்கம் என்கின்றனர் பின்னலாடை துறையினர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் 10% அளவிற்கு தான் பின்னலாடை தொழில் இருக்கும் என எதிர்காலத்தை கணிக்கின்றனர் தொழில்துறையினர்.

12 லட்சம் நபர்களின் வாழ்வாதாரம் இந்த பின்னலாடை தொழில் என்றும் , பின்னலாடை தவிர பிரதானமான மாற்று தொழில் என்பது திருப்பூருக்கு இல்லை என்றும் சுட்டிக்காட்டும் அதே வேளையில் , பின்னலாடை துறையின் போட்டி நாடுகளுடன் திருப்பூர் போட்டி போடமுடியாத சூழல் உள்ளதாகவும் விவரிக்கின்றனர் தொழில்துறையினர்.