வணிகம்

'நைகா'வில் முதலீடு: கோடிகளை குவிக்கும் அலியா பட், கத்ரீனா கைஃப்!

PT WEB

பாலிவுட் நடிகர்கள் அலியா பட், கத்ரீனா கைஃப் ஆகியோர் சில வருடங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் செய்த முதலீடுகளால் கோடிகளை குவித்து வருகின்றனர்.

இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் பெறும் பெண் நடிகர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் பாலிவுட் நடிகைகள் அலியா பட், கத்ரீனா கைஃப் இருவரும் கண்டிப்பாக இடம்பெறுவார்கள். இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் முன் அழகு சாதனங்கள் உள்ளிட்ட ஃபேஷன் பொருட்களை விற்பனை செய்கின்ற நிறுவனமான 'நைகா' (Nykaa)-வில் முதலீடுகள் செய்திருந்தனர். சமீபத்தில் ஐபிஓ எனப்படும் பங்குச்சந்தை பொதுவெளியீட்டில் 'நைகா' நிறுவனம் பட்டியலிடப்பட்டது.

இதற்கு பின் அலியா பட், கத்ரீனா கைஃப் செய்த முதலீடு சுமார் 10 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அலியா பட் 2020-ம் ஆண்டு நைகாவின் தாய் நிறுவனமான FSN E-Commerce Ventures நிறுவனத்தில் 4.95 கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்திருந்தார். ஐபிஓ வெளியீட்டு பின் இந்த முதலீட்டின் மதிப்பு ரூ.54 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதேபோல், நைகாவின் கிளை நிறுவனமான கே பியூட்டியில் 2018-ம் ஆண்டு ரூ.2.04 கோடி முதலீடு செய்திருந்தார் நடிகை கத்ரீனா கைஃப். ஐபிஓ வெளியீட்டு பின் இந்த முதலீட்டின் மதிப்பு ரூ.22 கோடியாக அதிகரித்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

பாலிவுட் பிரபலங்கள் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வது இது ஒன்றும் முதல்முறை கிடையாது. சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 2013-ம் ஆண்டு JustDial நிறுவனத்தில் செய்த முதலீடு செய்திருந்தார்.

இதேபோல் அலியா பட் சமீபத்தில் Phool என்ற நிறுவனத்திலும், முன்னதாக 2018-ல், StyleCracker என்ற நிறுவனத்திலும் முதலீடு செய்திருந்தார். இதேபோல் மற்றொரு நடிகை தீபிகா படுகோனே தனது கேஏ எண்டர்பிரைசஸ் எல்எல்பி நிறுவனம் மூலம் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடுகளை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.