வணிகம்

மூன்று முதலீட்டுக் கணக்குகள் முடக்கம்: ஆட்டம் கண்ட அதானி குழும பங்குகள்!

மூன்று முதலீட்டுக் கணக்குகள் முடக்கம்: ஆட்டம் கண்ட அதானி குழும பங்குகள்!

நிவேதா ஜெகராஜா

இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கெளதம் அதானியுடைய நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில வருடங்களாக லாபத்தை அள்ளிக்கொடுக்கும் வகையில் தொடர்ந்து பங்குசந்தையில் ராக்கெட்வேக விலை உயர்வால் முதலீட்டர்களை வியக்கவைத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில், அதானி குழும பங்குகள் இன்று இந்தியப் பங்குசந்தைகளில் திடீர் சறுக்கலை சந்தித்தன.

இந்தியப் பங்குசந்தைகளில் முதலீடு செய்யும் அந்நிய நிறுவனங்கள் தங்களுடைய உரிமையாளர் குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பது விதிமுறை. அதானி குழுமத்தில் கணிசமாக முதலீடு செய்துள்ள மூன்று நிறுவனங்கள் வெளிப்படையாக தகவல் தெரிவிக்காததால், அந்த நிறுவனங்களுக்கு, இந்திய பங்குசந்தையில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் உரிமையை மேலாண்மை செய்யும் என். எஸ்.டி.எல் (NSDL) நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.

ஆனால், அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பாண்ட், க்ரேஸ்ட்டா பாண்ட் மற்றும் APMS இன்வெஸ்ட்மென்ட் பாண்ட் ஆகிய மூன்று முதலீட்டு நிறுவனங்கள் முழுத் தகவல்களை தெரிவிக்கவில்லை என்பதால், இந்த மூன்று நிறுவனங்களின் கணக்குகளை NSDL
முடக்கியாக தகவல் வெளியானது.

உடனடியாக இந்தியப் பங்குசந்தைகளில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிந்தது. பல்வேறு அதானி நிறுவனங்களின் பங்குகளின் விலை 5 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்தன. இந்த வீழ்ச்சி அதானி போர்ட்ஸ், அதானி ட்ரான்ஸ்மிஷஸின், அதானி பவர், அதானி என்டர்ப்ரிஸ்பேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை பாதித்தது.

சர்ச்சையில் சிக்கிய மூன்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக அதானி குழும நிறுவன பங்குகளில் 43,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று நிறுவனங்கள் மொரிசியஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டவை.

இதற்கிடையே, அதானி குழுமம் சம்பந்தப்பட்ட்ட முதலீட்டு நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்படவில்லை என விளக்கம் அளித்தது. அதைத்தொடர்ந்து, அதானி குழும நிறுவன பங்குகளின் விலை ஓரளவுக்கு சரிவிலிருந்து மீண்டன.

அதானி குழுமத்தின் வியாபாரம் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், அந்தக் குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருகின்றன. இந்திய பொருளாதாரம் கடந்த நிதியாண்டில் சரிவை சந்தித்தபோதும், இந்த அசுர வளர்ச்சி தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

- கணபதி சுப்ரமணியம்