வணிகம்

டிசிஎஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.9926 கோடி!

Veeramani

டிசிஎஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.9926 கோடியாக  இருக்கிறது. ரூ.10000 கோடி என்னும் அளவில் இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் சற்று குறைந்திருக்கிறது. இந்த காலாண்டில் வருமானம் 50,591 கோடியாக இருக்கிறது.

கடந்த காலாண்டில் 35209 பணியாளர்களை டிசிஎஸ் இணைத்திருக்கிறது. ஒரு காலாண்டில் இணைக்கப்பட்ட அதிகபட்ச பணியாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். மார்ச் காலாண்டு முடிவில் மொத்த எண்ணிக்கை 5.92 லட்சமாக இருக்கிறது. கடந்த நிதி  ஆண்டில் மட்டும் 1.03 லட்சம் பணியாளர்கள் புதிதாக இணைந்திருக்கிறார்கள். 153 நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு பணிபுரின்றனர். பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 35.6 சதவீதமாக இருக்கிறது.



ஐடி பணியாளர்களுக்கான தேவை சந்தையில் அதிகமாக இருப்பதால் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. ஜனவரி காலாண்டில் 13 சதவீதமாக இருந்த வெளியேறுபவர்கள் விகிதம் தற்போது 17 சதவீதத்துக்கு மேல் இருக்கிறது. அடுத்த சில காலாண்டுகளுக்கும் இதே அளவிலே வெளியேறுபவர்கள் விகிதம் இருக்கும் என நிறுவனம் கணித்திருக்கிறது.

கடந்த நிதி ஆண்டில் 6 சதவீதம் முதல் 8% வரை சம்பள உயரவு இருந்தது. வரும் நிதி ஆண்டிலும் இதே அளவுக்கு சம்பள ஏற்றம் இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் ஒரு பங்குக்கு 22 ரூபாயை டிவிடெண்டாக டிசிஎஸ் அறிவித்திருக்கிறது.



தற்போது ஒரு பங்கின் விலை ரூ3691 என (ஏப் 12 வர்த்தகம் முடிவில்) முடிந்திருக்கிறது. ஆனால் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் 4240 ரூபாய் என்பதை இலக்கு விலையான நிர்ணயம் செய்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக கடந்த நிதி ஆண்டில் ரூ38,327 கோடி அளவுக்கு நிகர லாபம் இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் மொத்த வருமானமும் ரூ.1,91,754 கோடியாக  இருக்கிறது.

மூத்த பணியாளர்களை அவர்களின் பணியிடத்துக்கு வருமாறு டிசிஎஸ் கூறியிருக்கிறது. ஏப்ரல் முதல் வாரத்துக்கு மூன்று நாட்கள் வருமாறு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்தார்.