வணிகம்

ஏடிஎம்-யில் பணமெடுக்க மாதம் 3 முறை மட்டுமே இலவச அனுமதி?

ஏடிஎம்-யில் பணமெடுக்க மாதம் 3 முறை மட்டுமே இலவச அனுமதி?

webteam

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்பு முதலாவதாக தாக்கலாகவுள்ள மத்திய பட்ஜெட்டில், ஏடிஎம் பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைத்து மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கான அறிவிப்புகளை அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான எண்ணிக்கை குறித்த கட்டுப்பாடு இடம்பெறும் எனத் தெரிகிறது. அதன்படி, கணக்கு வைத்திருக்கும் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களிலும் மாதத்துக்கு 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கப்படவுள்ளது. அதற்கு மேல் ஏ‌டிஎம் பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம், டெபிட், கிரெடிட் கார்டுகள், இணைய தள வங்கிப் பரிவர்த்தனை, மொபைல் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட மின்னணு பயன்பாடுகளை அதிகரிக்கச் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், கடைகள், சேவை நிறுவனங்களில் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதும் அதிகரித்து, செலவழிப்பு அனைத்துமே கணக்கில் வரும் என்பதால் கறுப்புப் பண உருவாக்கம் தடுக்கப்படும் என மத்திய அரசு கருதுகிறது. ஏடிஎம்களில் மாதம் 3 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்கும் புதிய விதிமுறையை பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.