Nirmala Sitharaman Union Budget 2025
வணிகம்

2025-26 மத்திய பட்ஜெட்: துறை சார்ந்த எதிர்பார்ப்புகள்..!

மத்திய பட்ஜெட் லைவ் அப்டேட்ஸ்

கௌசல்யா

ஹைபிரிட் வாகனங்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வலியுறுத்தல்

இதேபோல எதிர்வரும் பட்ஜெட்டில் ஹைபிரிட் வாகனங்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என துறை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலால் ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னரே வரி குறைப்பது குறித்து அறிவிக்கப்படும்.

இருப்பினும், துறை சார்ந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஹைபிரிட் வாகனங்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஹைபிரிட் வாகனங்களுக்கு தற்போது 28 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இது மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை விட அதிகம். எனவே, இதனை மாற்றி அமைப்பது தொடர்பான அறிவிப்புகள் எதிர்வரும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க வேண்டும்: அசோச்செம்

எதிர்வரும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க வேண்டும் என வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் சங்கமான அசோச்செம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தனிநபர் வருமானவரி ஹாங்காங்கில் 15 சதவிகிதமாகவும், இலங்கையில் 18 சதவிகிதமாகவும், வங்கதேசத்தில் 25 சதவிகிதமாகவும், சிங்கப்பூரில் 22 சதவிகிதமாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ASSOCHAM

ஆனால், இந்தியாவில் உச்சபட்ச வரி அடுக்கு பிரிவில் 42 சதவிகிதமாக உள்ளதை அசோச்செம் சுட்டிக்காட்டியுள்ளது. புதிய வரி விகித முறையில் இது 39 சதவிகிதமாக உள்ளது. அதேநேரம், கார்ப்பரேட் வரி விகிதம் 25 சதவிகிதமாக மட்டுமே உள்ளது என அசோச்செம் தெரிவித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியுடன் ஒப்பிடும்போது தனிநபர் வரி அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள அசோச்செம், இதனை எதிர்வரும் பட்ஜெட்டில் குறைக்க வலியுறுத்தியுள்ளது.

எந்தெந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்?

  • முதல் மற்றும் 2ஆம் தர நகரங்களில் வீடுகளுக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் பிரதமரின் ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  • கிராமப்புற சாலைகள் இணைப்பில் கவனம் செலுத்தும் திட்டமான பிரதமரின் கிராம சதக் யோஜனா திட்டத்திற்கு எதிர்வரும் பட்ஜெட்டில் குறிப்பிடதக்க தொகை ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கிராமங்களில் வளர்ச்சியை அதிகரிக்க இத்திட்டத்திற்கான செலவினங்களை 10 சதவிகிதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

  • குறைந்தபட்ச ஆதரவு வருவாய் வழங்கும் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு கூடுதலாக நிதியை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

  • நாட்டின் முதுகெலும்பாக திகழும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் இத்துறைக்கு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ரியல் எஸ்டேட் துறைக்கு என்ன?

ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சியடையும் நோக்கில் எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என துறை சார்ந்தவர்கள் வலியுறுத்துகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரியல் எஸ்டேட் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், கடன் சார்ந்த மானியத் திட்டத்தை தங்கள் துறைக்கு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். ரியல் எஸ்டேட் துறையில் கட்டுமான பணிகள் இல்லாத நாட்களில் நிறுவனங்களுக்கு வரி வசூலிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றனர். வீட்டுக் கடனுக்கு திரும்ப செலுத்தும் வட்டிக்கு வரிவிலக்கை அதிகப்படுத்த வேண்டும் எனவும் ரியல் எஸ்டேட் துறையினர் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், உட்கட்டமைப்பு திட்டங்களை அதிகப்படுத்த வேண்டும், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களுக்கு சீர்திருத்தங்கள், ஒற்றைச்சாளர முறையில் அனுமதி முறையை அறிமுகப்படுத்துதல் ஆகியவைகளையும் எதிர்வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுமான நிறுவனங்களிடம் பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஊக்கத் தொகைகளை அறிமுகப்படுத்துவதும் அவசியம் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மாத சம்பளம் வாங்குவோருக்கு மத்திய பட்ஜெட்டில் கூடுதல் வரிச்சலுகை கிடைக்குமா

மாதச் சம்பளம் வாங்குவோருக்கு எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் வரிச்சலுகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாத வருவாய் பிரிவில் நடுத்தர பிரிவினரே அதிகம் உள்ள நிலையில்  தங்களுக்கு நிதிச்சுமையை குறைக்கும் நோக்கில் வரிச்சலுகை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.  குறிப்பாக, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கிற்கான வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே 80சி பிரிவில் வரிவிலக்கு வரம்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது. 80சி பிரிவின் கீழ், ஒருசிலவற்றை மட்டும் தவிர்த்து மியூச்சுவல் ஃபண்ட், பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், பணியாளர் வருங்கால வைப்பு நிதி, யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்கள், சுகன்யா சம்ரிதி  என அனைத்து முதலீட்டு திட்டங்களும் வருகின்றன. அதேபோல, 2 குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், வீட்டுக் கடனில் அசல் தொகையை திரும்பிச் செலுத்துதல், ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கு செலுத்தப்படும் பிரீமியங்கள் உள்ளிட்டவையும் 80சி பிரிவின் கீழ் வருகின்றன. எனவே, எதிர்வரும் பட்ஜெட்டில் 80சி பிரிவில் வரிச்சலுகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

சிறு, குறு தொழில்களுக்கான வரியை15% ஆக குறைக்க வேண்டும்

வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சிறு, குறு தொழில்களுக்கான வரியை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்க தமிழக சிறு, குறு தொழில்கள் சங்கம் டான்ஸ்டியா (TANSTIA) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை வைத்துள்ளது. மேலும், பொதுத் துறை நிறுவனங்களின் கட்டாய கொள்முதல் அளவை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக உயர்த்த வேண்டும் எனவும் அனைத்து வங்கிகளிலும் சிறு, குறு நிறுவனங்களுக்கு ஒரே அளவாக 8 சதவீத வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்றும் டான்ஸ்டியா கோரிக்கை வைத்துள்ளது. 

மத்திய பட்ஜெட்டில் தலைநகர் டெல்லிக்கு ஒன்றும் கிடையாது

2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் டெல்லிக்கு எந்த அறிவிப்பும் இருக்கக்கூடாது என அமைச்சரவை செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார். அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதியும் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்த முறை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இருக்க வாய்ப்பில்லை. 

ஜிஎஸ்டியை 1%ஆக குறைக்க நவரத்தினங்கள் மற்றும் நகைகள் துறை கோரிக்கை

எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டியை ஒரு சதவிகிதமாக குறைக்க வேண்டும் என நவரத்தினங்கள் மற்றும் நகைகள் உற்பத்தித் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், ஜிஎஸ்டி அதிகமாக இருப்பதால் தங்கள் துறை வெகுவாக பாதிப்பதாக அனைத்து இந்திய நவரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்நாட்டு கவுன்சிலின் தலைவர் ராஜேஷ் ரோக்டே தெரிவித்துள்ளார். எனவே, வரவிருக்கும் பட்ஜெட்டில் ஜிஎஸ்டியை 3 சதவிகிதத்தில் இருந்து ஒரு சதவிகிதமாக குறைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜிஎஸ்டியை குறைப்பதனால், கிராமப்புற மக்கள் நகைகளை வாங்குவது அதிகரிக்கும் என்றும் இது பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் எனவும் அனைத்து இந்திய நவரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்நாட்டு கவுன்சில் கூறியுள்ளது. அதேபோல, ஆய்வகங்களில் உருவாக்கப்படும் வைரங்களுக்கு ஜிஎஸ்டியில் சலுகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களுக்கு இறக்குமதி வரியை குறைத்தால் ஆபத்து!

எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களுக்கு இறக்குமதி வரியை குறைத்தால் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் துறை பாதிப்படையக்கூடும் என ஆய்வு நிறுவனமான GTRI தெரிவித்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் வெற்றிப்படிகளில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி துறையும் உள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் 4 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சில நிறுவனங்கள் இறக்குமதி வரியை குறைக்க கோரிக்கை விடுப்பதை சுட்டிக்காட்டியுள்ள GTRI, அப்படி செய்தால், உள்நாட்டில் முதலீடுகள் குறைந்து இறக்குமதி அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதன் விளைவு நிறைய பேர் வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்படும் என்பதால் இறக்குமதி வரியை குறைப்பது சரியல்ல என தெரிவித்துள்ளது.

வங்கி டெபாசிட்: வரிச் சலுகை தேவை

வங்கிகளில் டெபாசிட் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் வரிச்சலுகைகள் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், நிதித் துறை பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பை அதிகரிக்க, நிலையான வைப்புத் தொகை போன்ற முதலீட்டு திட்டங்களுக்கு சில வரிச் சலுகைகளை அறிவிக்குமாறு நிதியமைச்சரிடம் நிதித் துறை பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். தற்போது, வங்கி டெபாசிட்களில் கிடைக்கும் வட்டியை வருமானமாக கணக்கிட்டு வரி விதிக்கப்படுவதால், இந்த முதலீட்டு திட்டத்தில் மக்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே, நிலையான வைப்புத் தொகை திட்டங்களை நீண்டகால மூலதன ஆதாய வரியுடன் இணைத்தால் வரிச்சுமை குறையும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது.

ஆடை ஏற்றுமதியாளர்களின் கோரிக்கை

ஆடைகள் ஏற்றுமதியை அதிகரிக்க எதிர்வரும் பட்ஜெட்டில் சலுகைகளை அறிவிக்க வேண்டும் என ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ஆடைகள் தயாரிக்க தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கும் வரிச்சலுகையும், சுங்க வரி விலக்கும் அளிக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதிதாக ஆடை உற்பத்தி நிறுவனங்களை அமைக்க வரிச்சலுகைகளை நீட்டிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். வரிப்பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பப்பெறும் வகையில் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் 45 நாட்களுக்குள் பணத்தை செலுத்த வேண்டும் என்ற விதியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆடை ஏற்றுமதியாளர்கள் முன்வைத்துள்ளனர். எதிர்வரும் பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால், ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியும் வளர்ச்சியடையும் என ஆடை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

EPFO பென்ஷனை குறைந்தபட்சம் ரூ.5,000ஆக உயர்த்த வேண்டும்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாயை பென்ஷனாக வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய பொதுச்செயலாளர் எஸ்.பி.திவாரி வலியுறுத்தியுள்ளார். மேலும் தனிநபர் வருமான வரியில்10 லட்சம் ரூபாய் வரை விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதவிர, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளித்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை எதிர்வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பட்ஜெட்: பிளாஸ்டிக் துறையினர் கோரிக்கை

பிளாஸ்டிக் துறைக்கும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தை வழங்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து இந்திய பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் அசோசியேஷனின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அப்போது, பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டியை முற்றிலுமாக நீக்க வேண்டும் அல்லது 18 சதவிகிதத்தில் இருந்து 5சதவிகிதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், மறுசுழற்சி செய்யும் இயந்திரங்களை வாங்க 20 சதவிகிதம் மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சீனா ஏற்றுமதி செய்யும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை இந்தியாவில் விற்கப்படும் விலையை விட 25 சதவிகிதம் அதிகம் என்றும் எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.