வணிகம்

ஆகஸ்ட் மாதத்தில் ஐபிஒ மூலம் ரூ.28,000 கோடி திரட்ட 18 நிறுவனங்கள் முடிவு

Veeramani

பங்குச்சந்தை உற்சாகத்தில் இருப்பதால் ஜூலை மாதம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஐபிஒ மூலம் திரட்டப்பட்டது. கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் ரூ.50,000 கோடி அளவுக்கு திரட்டப்பட்டிருக்கிறது. ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் மேலும் பல ஐபிஓகள் வர இருக்கின்றன.

ஆகஸ்ட் மாதத்தில் 18 நிறுவனங்கள் ஐபிஓ மூலம் நிதி திரட்ட முடிவெடுத்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தேவ்யானி இண்டர்நேஷனல், கார்டிரேட், மெடி அஸிஸ்ட் ஹெல்த்கேர், கெம்லாஸ்ட் சன்பார், பென்னா சிமென்ட், ஆதித்யா பிர்லா மியூச்சுவல் பண்ட், பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் சுமார் ரூ.28,000 கோடி அளவுக்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளன.

2020-ம் ஆண்டு இரண்டாம் பாதியில் ஐபிஓ சந்தை உற்சாகம் அடைந்தது. அப்போது முதல் இதுவரை பல நிறுவனங்களின் ஐபிஒக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதுவரை 34 நிறுவனங்களுக்கு மேல் ஐபிஒவுக்காக செபியிடம் விண்ணப்பித்திருக்கின்றன. மேலும், சுமார் 50 நிறுவனங்கள் ஐபிஒ வெளியிடும் திட்டம் இருப்பதாக அறிவித்திருக்கின்றன. பல டெக்னாலஜி நிறுவனங்களின் ஐபிஓவும் அடுத்த சில மாதங்களில் வெளியாக இருக்கிறது.

2007-ம் ஆண்டு மட்டும் 100 நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது. சந்தைச் சூழல் சாதகமாக இருந்தால் 2007-ம் ஆண்டை விட அதிக ஐபிஓக்களை நாம் எதிர்பார்க்கலாம்.