வணிகம்

எஃகு பொருட்களுக்கு 15% ஏற்றுமதி வரி - ஐரோப்பா ஆர்டர்கள் ரத்து செய்யப்பட வாய்ப்பு

Veeramani

எஃகு பொருட்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள 15% ஏற்றுமதி வரி காரணமாக எஃகு நிறுவனங்களின் ஐரோப்பிய ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று ஜிண்டால் ஸ்டீல் நிர்வாக இயக்குநர் வி.ஆர்.சர்மா தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று எட்டு எஃகு பொருட்களுக்கு 15% ஏற்றுமதி வரியை இந்தியா விதித்தது. இது தொடர்பாக பேசிய ஜிண்டால் ஸ்டீல் நிர்வாக இயக்குநர் வி.ஆர்.சர்மா, " மத்திய அரசு எங்களுக்கு குறைந்தபட்சம் 2-3 மாத கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்.  இந்திய எஃகு உற்பத்தியாளர்களுக்கு சுமார் 2 மில்லியன் டன்கள் ஏற்றுமதி ஆர்டர்கள் நிலுவையில் இருக்கிறது. இதில் முக்கியமாக ஐரோப்பாவிற்கு அதிக அளவில் நிலுவை உள்ளது. இந்த ஏற்றுமதி வரியின் காரணமாக எஃகு துறைமுகங்களில் அல்லது உற்பத்தியின் பல கட்டங்களில் பிடிக்கப்படுகின்றன. எங்களிடம் மட்டும் 260,000 டன் ஆர்டர்கள் உள்ளன, அவை ஏற்றுமதி வரி பூஜ்ஜியமாக இருந்தபோது எடுக்கப்பட்டவை" எனத் தெரிவித்தார்.



ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரஷ்யாவும் உக்ரைனும் 2020 இல் 46.7 மில்லியன் டன் இரும்பினை ஏற்றுமதி செய்தன. தற்போது அங்கே போர் நடப்பதால் இந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே  அதிகளவில் இந்தியாவிலிருந்து இரும்பு பொருட்கள் ஏற்றுமதி நடந்தது.

தொடர்ந்து அதிகரிக்கும் சில்லறை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மாற்றியமைக்கப்பட்ட வரிவிகிதங்களின் படி, உலோகத்தின் மீதான ஏற்றுமதி வரிகள் எட்டு வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.