Rohit
Rohit Twitter
Cricket

'ரோகித் சர்மாவுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை' - சொல்கிறார் சுனில் கவாஸ்கர்

Justindurai S

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த 35-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் மும்பைக்கு இது 4-வது தோல்வியாகும். மும்பை அணியைப் பொருத்தவரை, அந்த அணியின் பலவீனமாக பந்துவீச்சு இம்முறை அப்பட்டமாக வெளிப்பட்டது. அந்த அணியின் டெத் ஓவர் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி 5 ஓவர்களில் 96 ரன்களை வாரி வழங்கிய மும்பை இந்தியன்ஸ், இந்த ஆட்டத்தில் கடைசி 4 ஓவர்களில் 70 ரன்களைக் கொடுத்தது.

Sunil Gavaskar

இந்நிலையில் இப்போட்டிக்குப் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், 'கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு புத்துணர்வுடன் திரும்ப வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "ரோகித் சர்மாவுக்கு கொஞ்சம் ஓய்வு தேவை என்று நினைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக அவர் சிறிது ஓய்வு எடுத்து தன்னை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும். சில போட்டிகளுக்கு பிறகாவது அவர் ஐபிஎல்லில் மீண்டும் ஆடலாம். ஆனால் இப்போது கொஞ்சம் ஓய்வு எடுங்கள். அவர் எதையோ யோசித்துக்கொண்டு இருக்கிறார். ஒருவேளை ரோகித் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

Rohit Sharma

ஒரு அதிசயத்தால் மட்டுமே இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸை பிளேஆஃப்-க்கு அழைத்துச் செல்ல முடியும். பிளேஆஃப்-க்கு தகுதி பெற அவர்கள் சில அசாதாரணமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும். மும்பை அணி பந்து வீச்சாளர்கள் தங்களது தவறுகளை கண்டுபிடித்து திருத்திக்கொள்ள வேண்டும்'' என்று கவாஸ்கர் கூறினார்.