விவசாயம்

மரக் கன்றுகளை நட்டு ! பழமையை காக்க இளைஞர்கள் முயற்சி

மரக் கன்றுகளை நட்டு ! பழமையை காக்க இளைஞர்கள் முயற்சி

webteam

முந்தைய காலத்தில் தோப்பாக இருந்த பகுதியில் தற்போது மரங்கள் இல்லாமல் அழிந்து காணப்பட்ட நிலையில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு மீண்டும் பழமையான பசுமை பகுதியாக மாற்றும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் கிராமத்தில் இளந்தோப்பு என்ற இடம் உள்ளது. இந்த இளந்தோப்பில் முந்தைய காலத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்ததாகவும், இவ்வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் மாசித் திருவிழாவின் போது ஒச்சாண்டம்மனின் உபகரணங்கள் அடங்கிய பெட்டிகளை இந்த மரங்களின் நிழலில் வைத்து இளைப்பாரி விட்டு செல்லும் வழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மரங்களில் பறவைகள் அதிகம் வாழ்ந்து வந்த நிலையில் பரவைகளின் இனிய இசையால் இந்த இளந்தோப்பு பகுதிக்கு வந்தாலே ஓர் புத்துணர்ச்சி மற்றும் மன நிம்மதியடையும் என முன்னோர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலை நாளடைவில் மழை பற்றாக்குறை மற்றும் வறட்சி காரணமாக இந்த தோப்பில் இருந்த மரங்கள் அழிந்து விட்டது. மேலும் தோப்பில் இருந்த பறவைகளும் இடம்பெயர்ந்து விட்டதால் வனமாக இருந்த இந்த பகுதி தற்போது வெட்ட வெளி காடாக காணப்படுகிறது. தற்போது இந்த இடத்தில் குறைந்த அளவிலான மரங்களே உள்ள நிலையில் மேலும் மரங்களை நட்டு மீண்டும் பழமையை காக்க முடிவெடுத்தனர் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள். தங்களுடைய முயற்சியை கிராம மக்களிடம் தெரிவித்த அவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட நிதி திரட்டி வருகின்றனர். முதற்கட்டமாக இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடப்பட்டு அதனை பராமரிக்க நபர்கள் நியமிக்கப்பட்டு மீண்டும் பசுமையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து வரும் 5 அல்லது 10 ஆண்டுகளில் இந்த பகுதி மீண்டும் புத்துணர்ச்சியுடன் பழமை மாறாமல் தோப்பாக காட்சியளிக்கும் என கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் தமது பகுதியில் உள்ள பழமை வாய்ந்த இடங்களை கண்டறிந்து மீண்டும் புத்துணர்வு அளிக்க வேண்டும் எனவும் தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் மரங்களை நட்டால் மழை வரும் அதனால் நாடு செழிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.