பவானி சாகர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை விவசாயத்திற்காக எடுக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதற்கு கண்டனம் தெரிவித்து சத்தியமங்கலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 52 அடியாகவுள்ள நிலையில், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதனையும், பவானி ஆற்றங்கரையோரம் உள்ள கிணறுகளிலிருந்து தண்ணீரையும் விவசாயிகள் சாகுபடிக்காக பயன்படுத்தி வருகின்றனர். குடிக்க தண்ணீர் இல்லாததால், பவானி ஆற்றிலிருந்தும், ஆற்றங்கரையோர கிணறுகளிலிருந்தும் விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறி தண்ணீர் எடுத்தால், கிணறுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து சத்தியமங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மறியலில் ஈடுபட்டனர்.