அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கவிருக்கும் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவுக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் செப்டம்பர் 05 ஆம் தேதிக்குப் பிறகு விவசாயிகளால் சீல் வைக்கப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் இன்று அறிவித்தார். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக எட்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், "லக்னோ டெல்லியாக மாறும்" என்று அறிவித்தனர்.
ராகேஷ் டிக்கைட், யோகேந்திர யாதவ், ஷிவ்குமார் கக்கா மற்றும் பிற போராட்டத் தலைவர்கள், இந்த போராட்டத்தை 'மிஷன் உ.பி. மற்றும் உத்தரகண்ட்' என்று அறிவித்தனர். வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இம்மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் செப்டம்பர் 5 ஆம் தேதி விவசாயிகளால் திட்டமிடப்பட்டுள்ள 'கிசான் மகாபஞ்சாயத்து' முடிந்த பின்னரே இந்த போராட்டம் தீவிரமடையும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து பேசிய விவசாயிகள் போராட்டக்குழு தலைவர்கள், "நாங்கள் மிஷன் உ.பி மற்றும் உத்தரகண்ட் இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம். இந்த இயக்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தி போராட்டத்தை தீவிரமாக்குவோம். பெரிய பேரணிகள் மற்றும் மகாபஞ்சாயத்து மூலமாக பாஜக அரசாங்கத்தின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கிராம மட்டத்திலிருந்தே மக்களிடம் கொண்டுசெல்வோம். இந்த இரு மாநில தேர்தலில் விவசாயிகளுக்கு பாடம் புகட்டுவோம் "எனக் கூறினார்கள்.