திருச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியால் விவசாயிகள் வேளாண் தொழில் மேற்கொள்ளமுடியாமல் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், மாற்றுப்பயிருக்கு தங்களை மாற அறிவுறுத்தும் வேளாண்மைத்துறையினர், அது தொடர்பாக எந்த ஒரு விளக்கமோ, பயிற்சியோ அளிப்பதில்லை எனவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மற்றும் கட்டளைமேட்டு வாய்க்கால் பகுதிகளில், நெல் மற்றும் வாழையை விவசாயிகள் பிரதானமாக பயிரிட்டு வருகின்றனர். இவ்வாண்டு நிலவும் வறட்சி காரணமாக, நெல் மற்றும் வாழை சாகுபடியின் பரப்பை விவசாயிகள் குறைத்துள்ளனர். குறைந்த அளவில் மேற்கொள்ளப்பட்ட சாகுபடிக்கும், வாழைக் கன்று ஒன்றுக்கு 190 ரூபாய் வரை செலவழித்துள்ளனர். ஆனால் தண்ணீர் இல்லாததால் வாழை தற்போது காய்ந்து போவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் பகுதியில் மாற்றுப்பயிர் சாகுபடி செய்வது என்பது சாத்தியப்படாத ஒன்று என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, தென்னை மரங்கள் காய்ந்ததால் தென்னை விவசாயிகளும் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். பல வருடங்களாக பராமரித்து வளர்த்த மரங்களை வறட்சிக்கு காவு கொடுத்ததால் அவர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். மேலும், இலவச மின்சாரத்திற்காக இரண்டரை லட்சம் ரூபாய் வரை அரசுக்கு செலுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும், இலவச மின்சாரம் என்பது வெற்று அறிவிப்பு மட்டுமே எனவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் மத்திய மாநில அரசுகள், அந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையாக சென்றடைந்ததா என ஆய்வு செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாற்றுப்பயிருக்கு தங்களை மாற அறிவுறுத்தும் வேளாண்மைத்துறையினர், அது தொடர்பாக எந்த ஒரு விளக்கமோ, பயிற்சியோ அளிப்பதில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.