நெல் மூட்டைகள் pt desk
விவசாயம்

திருவாரூர் | அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள 15 லட்சம் நெல் மூட்டைகள் - காரணம் என்ன?

மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் 15 லட்சம் நெல் மூடைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: C.விஜயகுமார்

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா சாகுபடி வயல்களில் தற்போது அறுவடை பணிகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு மாவட்டம் முழுவதும் 532 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மன்னார்குடி, உள்ளிக்கோட்டை, வடுவூர், நீடாமங்கலம், கோட்டூர், கூத்தாநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நாள்தோறும் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை கையாள்வதில் ஏற்படும் கூடுகள் செலவுகளை குறைக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் திறந்தவெளி சோமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த திறந்தவெளி சேமிப்பு கிடங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால் தற்போது கொள்முதல் நிலையங்களிலேயே நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் நெல்மணிகள் அனைத்தும் காய்ந்து, எடை குறைந்து விடுகிறது.

இது தொடர்பாக கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறுகையில்...

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை திறந்தவெளி சேமிப்பு கிடங்குக்கு லாரிகளில் ஏற்றிச் சென்று அடுக்குவதும்,மீண்டும் சேமிப்பு கிடங்கிலிருந்து சரக்கு ரயிலுக்கு ஏற்றிச் செல்வதற்கும் இரண்டு லாரி வாடகைகள் தர வேண்டியுள்ளது என்பதற்காக, திமுக அரசு பொறுப்பேற்ற உடன் கொள்முதல் செய்யப்படுகின்ற நெல்லை நேரடியாக அரவைக்கு அனுப்பப்படும் எனக் கூறி, சரக்கு ரயில்களுக்கு நேரடியாக ஏற்றிச் செல்லும் நடைமுறையை கடைப்பிடித்தனர்.

ஒரு சரக்கு ரயிலில் 2000 மெட்ரிக் டன் நெல் மட்டுமே ஏற்ற முடியும் என்ற நிலையில், மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம் திருத்துறைப்பூண்டி பேரளம் ரயில் நிலையங்களில் சரக்கு ரயில்கள் தினசரி வரவழைக்கப்பட்டாலும் கூட, நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே அனுப்பி வைக்க இயலும். ஆனால், மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் சுமார் 15 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதலாகும் சூழலில், நெல் மூட்டைகளை மாற்றம் செய்வதில் ஏற்படும் காலதாமதத்துக்கும், எடை இழப்புக்கும் நெல் கொள்முதல் பணியாளர்கள்தான் பொறுப்பு என அதிகாரிகள் தங்கள் மீது பொருளாதார சுமையை சுமத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இதுதொடர்பாக கொள்முதல் பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மூவாநல்லூர் திறந்தவெளி சேமிப்பு கிடங்கு செயல்பட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இதைப்போல எஞ்சியுள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளையும் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை திறப்பது அல்லது விரைவாக நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதற்கு உரிய வழிகளை ஆராய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.