விவசாயம்

கண்ணீருடன் கடைமடை விவசாயிகள்: தூர்வாரப்படுமா பாசனக்கால்வாய்கள்?

கண்ணீருடன் கடைமடை விவசாயிகள்: தூர்வாரப்படுமா பாசனக்கால்வாய்கள்?

webteam

மேட்டூர் அணை வரும் 2ஆம் தேதி திறக்கப்பட்டாலும் கடைமடைக்கு தண்ணீர் வருமா என அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் உள்ளனர்.

டெல்டா பகுதியான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, கட்டக்குடி பகுதியிலிருந்து ஆற்றுப் பாசன வாய்க்கால் பிரிகிறது. சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலப்பரப்பின் நீர் ஆதாரமாக இந்த பாசனக்கால்வாய் விளங்குகிறது. இது கீழநெம்மேலி, மேலத்திருப்பாலக்குடி, பரவாக்கோட்டை வழியாக சுமார் 30 கிராமங்களைக்கடந்து முத்துப்பேட்டை கடற்பகுதியில் கலக்கிறது. 30 கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரவும் இந்த பாசனக்கால்வாய்தான் பேருதவி செய்கிறது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பாசனக்கால்வாய் சரிவர தூர்வாரப்படவில்லை. 

இதனால் கடைமடை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப்படுகை முழுவதும் சீமைக்கருவேல மரங்களும், காட்டாமணக்கு செடிகளும் பெரும் காடாய் வளர்ந்திருக்கின்றன. அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் 180 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இந்நிலையில் மேட்டூர் அணை வரும் 2ஆம் தேதி திறக்கப்பட்டாலும் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேருமா என்றும், பாசனக்கால்வாய்கள் தூர்வாரப்படாததால் இந்த ஆண்டும் சாகுபடியை இழக்க நேரிடுமோ என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். மேலும் போர்க்கால அடிப்படையில் பாசனக் கால்வாயை தூர்வாரி விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.