செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கொத்தபட்டி, மாயாண்டிபட்டி, சித்தார்பட்டி, முல்லையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் பச்சை மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து பச்சை மிளகாய் ஆண்டிபட்டி தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்த மழை காரணமாக பச்சை மிளகாய் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வழக்கத்தை விட மூன்று மடங்கு பச்சை மிளகாய் மார்க்கெட்டிற்கு வருகிறது. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மார்க்கெட்டில் ஏலம் போன பச்சைமிளகாய், தற்போது ஒரு கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மட்டுமே ஏலம் போகிறது.
இதனால் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள விவசாயிகளுக்கு பச்சை மிளகாயில் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பச்சை மிளகாய் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது போன்ற சமயங்களில் பச்சை மிளகாய்க்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.