விவசாயம்

”10 யூனிட்டுக்கு ரூ7,275 மின்சார கட்டணமா?” - விவசாயியின் புகாரும் அதிகாரிகளின் விளக்கமும்

webteam

வேலூரில் விவசாய நிலத்தில் 10 யூனிட் பயண்படுத்தியதற்காக 7,275 ரூபாய் மின்சார கட்டணம் வந்துள்ளதாக விவசாயி ஒருவர் குற்றச்சாட்டியுள்ளார். இதற்கு அதிகாரிகள் தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் விருதம்பட்டை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (54). இவர் லத்தேரி அடுத்த காளாம்பட்டில் 1.75 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளார். அதற்கு கமர்சியல் பிரிவில் மின் இணைப்பு பெற்று பயண்படுத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த காலங்களில் வந்த மின் கட்டணத்தை காட்டிலும் நேற்று (09.03.2023) எடுக்கப்பட்ட மின் அளவில் 10 யூனிட் உபயோகப்படுத்தியதற்கு, 7,275 ரூபாய் கட்டணம் விதித்துள்ளதாக விவசாயி சுந்தர் ராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “நான் அந்த நிலத்தில் விவசாயம் செய்வதே இல்லை, பெரும்பாலும் பயன்படுத்துவதே இல்லை. மோட்டார் அறையை பூட்டித்தான் வைத்துள்ளேன். இந்த நிலையில் 10 யூனிட் ஓடிய எனக்கு 7,275 ரூபாய் கட்டணம் வந்துள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் கேட்டதற்கு உரிய பதில் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளேன்” என்று கவலை தெரிவித்துள்ளார்.

இது கூறித்து மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது,

”சுந்தர் ராஜ் என்பவர் முதலில் குறைந்த அளவு திறன் கொண்ட மின் மோட்டாரை பயன்படுத்தக்கூடிய வகையில், 5 ஓல்டுக்கு அனுமதி பெற்றுள்ளார். ஆனால் தற்போது 7 ஓல்ட் அளவுக்கு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இது கடந்த 2 முறை பதிவானது. முதல் முறை நாங்கள் விட்டுவிட்டோம் இரண்டாவது முறை தான் அதை கணக்கில் எடுத்துக் கொண்டோம். மேலும், யூனிட் ஓடியது ஒரு புறம் இருந்தாலும் மின் பளு என்பது அதிகமாக ஏற்பட்டுள்ளது. எவ்வளவு ஓல்ட் பயன்படுத்தனுமோ அதற்க்கு முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். அந்த வகையில் 7 ஓல்ட்டுக்கான முன் வைப்பு தொகையும், அவர் பயன்படுத்தியதற்கான கட்டணத்தையும் சேர்த்து தான் இந்த கட்டணம் வந்துள்ளது.

மின் பளு என்பது மீட்டரில் தெரியாது. எங்களது கணிணியில் தான் தெரியும். அதே போல் முதல் கட்டமாக வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்தும் வகையில் தான் மொத்த கட்டணத்தையும் அட்டையில் குறிப்பிடுகிறோம். இது அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கவே. கட்டணம் செலுத்தும் போது தனி தனியாக குறிப்பிட்டு பில் வழங்கப்படும்.

அதேபோல் ஒரு சிலர் அளவுக்கு அதிகமான திறன் கொண்ட மோட்டாரை பொருத்தும் போது மின்வாரிய அலுவலர்களுக்கு தெரிவிப்பதில்லை, அதன் காரணமாகவே இது போன்ற சிக்கல்களை நாங்கள் சந்தித்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.