விவசாயம்

வீட்டுத் தோட்டம் அமைக்க மானிய விலையில் பொருட்கள் வழங்கும் தோட்டக்கலைத்துறை

webteam

கோவையில் வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்க தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை மானிய விலையில் பொருட்கள் அளித்து வருகின்றது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

மழை, வெள்ளம், வறட்சி, டீசல் விலையேற்றம் என ஏதாவது ஒரு காரணத்திற்காக காய்கறிகள் விலை உயர்வது தொடர் கதையாகி வருகிறது. இதனால் காய்கறிகளுக்கே பெரும் தொகையை செலவழிக்க வேண்டிய நிலையில் ஏழை, நடுத்தர மக்களின் குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கான பொருட்களை மானிய விலையில் தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை தந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் இத்திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தோட்டம் அமைப்பதற்கு தேவையான 522 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் 322 ரூபாய்க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது, ஆதார் அட்டை நகலை அளித்து விதைகள், இயற்கை உரம் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட பையை மாவட்ட தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற முடியும். வீட்டுக் காய்கறித் தோட்டத்தால் காய்கறிகள் புத்தம்புதிதாகவும், ரசாயன நச்சு இல்லாமலும் கிடைக்கின்றன. அதேசமயம் வீட்டு தோட்டத்தை பராமரிப்பது உடற்பயிற்சியுடன் கூடிய நல்லதொரு பொழுதுபோக்காகவும் உள்ளது என்கின்றனர் இவ்வசதியை பயன்படுத்தி வருபவர்கள்.