தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நான்கு மாடுகளை ஏர் பூட்டி கோவில் நிலத்தை உழுது ஊர் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சித்திரை முதல் நாளான இன்று உலகெங்கும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஏழு ஊர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்தனர். பின்னர் தென்பரங்குன்றம் பகுதியிலுள்ள திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் நான்கு ஏருகளை கட்டி அதில் மாடுகளை பூட்டி நாளேரு என்று அழைக்கப்படும் உழுகும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரம்பு குச்சியின் நுனியில் ஆணியடித்து பூக்களை சுற்றி விவசாயத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாளேரு நிகழ்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தென்பரங்குன்றம் குடைவரை கோவிலில் ஏழு ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த வருடத்தில் விவசாயத்திற்கான கூலி நிர்ணயம் மற்றும் விவசாயம் சம்பந்தமான பிரச்னைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த நாளேரு செய்தால் வெள்ளாமை செழித்து, செல்வங்கள் பெருகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. அதனால் இந்த நிகழ்வில் முதியவர்கள், இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். சென்ற ஆண்டு ஊரடங்கால் இந்நிகழ்வு நடைபெறவில்லை என்றும் இந்த வருடம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஊர் மக்கள் தெரிவித்தனர்.