விவசாயிகள் தற்கொலை பிரச்னையை ஒரே இரவில் தீர்த்து விட முடியாது என மத்திய அரசு கூறிய கருத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
விவசாயிகள் தற்கொலை பிரச்னை தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விவசாயிகள் தற்கொலைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறது என கருத்துத் தெரிவித்தது. அதேசமயம் விவசாயிகள் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் நலத்திட்டங்கள் 40% விவசாயிகளை சென்றடைந்துள்ளன என்றும், 2018 ஆம் ஆண்டிற்குள் 50% விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடையும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், விவசாயிகள் தற்கொலைப் பிரச்னைக்கு ஒரே இரவில் தீர்வு கண்டு விட முடியாது என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. 6 மாதத்திற்குள் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.