விவசாயம்

பூச்சிமருந்துகளை தொடாமலே தெளிக்கலாம் !

பூச்சிமருந்துகளை தொடாமலே தெளிக்கலாம் !

webteam

ஒருமணி நேரத்தில் 8 ஏக்கர் வரை பூச்சிமருந்துகளை ஹெலி ஸ்பிரேயர் மூலம் பாதுகாப்பான முறையில் தெளிக்கலாம்.

பெரம்பலூர் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் கிராமத்தில் மக்காச்சோளப் பயிருக்கு பூச்சி மருந்துகளை தெளிக்க ஹெலி ஸ்பிரேயர் பயன்படுத்தி வருகின்றனர்.வயலில் பூச்சிமருந்து தெளிப்பது வழக்கமான நடைமுறையே. ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லையில் உள்ள கிழக்கு ராஜபாளையம் கிராமத்தில் பொறியாளர்கள் இருவர், ஹெலி ஸ்பிரேயர் மூலம் பாதுகாப்பான முறையில் பூச்சி மருந்து தெளித்து வருகின்றனர்.

மக்காச்சோளப் பயிருக்கு பூச்சிமருந்துகளை ஹெலி ஸ்பிரேயர் மூலம் தெளித்து வருகிறனர். பூச்சிமருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் இந்த ஹெலிஸ்பிரேயர், 14 கிலோ எடைகொண்டது. இந்த ஹெலிஸ்பிரேயர் மூலம் ஒரே நேரத்தில் 10 லிட்டர் பூச்சிமருந்தை தெளிக்கலாம். ஒருமணி நேரத்தில் 6 முதல் 8 ஏக்கர் பரப்பளவு வரை மருந்து தெளிக்க முடியும். இதற்காக மிகமிகக் குறைந்த கட்டணமாக ஏக்கருக்கு 600 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்படுகிறது. இந்த ஹெலிஸ்பிரேயரை சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார், சுரேஷ் ஆகிய மென்பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த ஹெலி ஸ்பிரேயரில் உள்ள மென்பொருளில் எவ்வளவு பரப்பு என்று கணக்கிட்டு பதிவிட்டால், அதற்கு தகுந்தபடி பூச்சிமருந்தை பயிர்களில் தெளிக்கும் என்கிறார் மென்பொறியாளர் செல்வகுமார்.


 
இந்த ஹெலிஸ்பிரேயரை ரிமோட் மூலமும் இயக்கலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் வீரிய ரக பூச்சிமருந்தை தெளித்ததில், 5 விவசாயிகள் உயிரிழந்த சம்பவங்களை அடுத்து, இந்த ஹெலி ஸ்பிரேயரை மென்பொருள் வசதியுடன் உருவாக்கி நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர் இந்த மென்பொறியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.