விவசாயம்

ராசிபுரம்: வெட்டிய மரக்கிளையில் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கும் மாங்காய்கள்

kaleelrahman

ராசிபுரம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியரின் விவசாய தோட்டத்தில் வெட்டப்பட்ட மரக்கிளையில் நூற்றுக்கு மேற்பட்ட மாங்காய்கள் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்குகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, சாகுபடி செய்யப்படும் மாம்பழங்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ராசிபுரத்தை அடுத்துள்ள பல்லவநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்துசாமி என்பவர் தனது தோட்டத்தில் 2 மா மரங்களை வளர்த்து வருகிறார். இந்த மாமரத்தில் வெட்டப்பட்ட  மரக்கிளையில் கொத்துக் கொத்தாக நூற்றுக்கும் மேற்பட்ட மாங்காய்கள் காய்த்துத் தொங்குகிறது.

மாமரத்தில் எப்போதும் கிளைகளில் நான்கைந்து மாங்கய்கள் மட்டுமே காய்த்து தொங்கும், ஆனால், இந்த வெட்டப்பட்ட மரக்கிளையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாங்காய்கள் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது. மேலும் இது குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்துசாமி கூறுகையில், “கடந்த 15 வருடங்களாக மா மரங்கள் வளர்த்து வருகிறேன். இது போன்ற ஒரு அதிசய நிகழ்வு இதுவரை நடந்ததில்லை. வெட்டப்பட்ட ஒரே மரக்கிளையில் 100-க்கும் மேற்பட்ட மாங்காய்கள் காய்த்து தொங்குவதை அப்பகுதி கிராம மக்கள் அதிசயமாகவும் ஆச்சரியத்துடனும் பார்த்து செல்கின்றனர்” எனத் தெரிவித்தார்.