விவசாயம்

பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி: தமிழகத்திலேயே முதல் முறையாக விழுப்புரத்தில் தொடக்கம்

பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி: தமிழகத்திலேயே முதல் முறையாக விழுப்புரத்தில் தொடக்கம்

நிவேதா ஜெகராஜா
பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி, தமிழகத்திலேயே முதல் முறையாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வேளாண்மையை பிரதானமாகக் கொண்ட மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. மேலும், தமிழக அரசின் வேளாண் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தமிழகத்திலேயே இதுவரை எங்கும் இல்லாத அளவில், முதல் முறையாக விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு அரசு விதைப் பண்ணையில் பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்யும் பணிகளை, மாவட்ட ஆட்சியர் த.மோகன் இன்று தொடங்கி வைத்தார். பாரம்பரிய நெல் விதைகளான தூயமல்லி இரண்டு ஏக்கரிலும், செங்கல்பட்டு சிறுமணி இரண்டு ஏக்கரிலும், விதைப் பண்ணையில் இன்று நாற்று விடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அரசு விதைப் பண்ணையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் தூயமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறுமணி பாரம்பரிய நெல் விதைகளை, விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களுக்குக் கொண்டு சென்று, இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ள, ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு வழங்க, வேளாண்மை துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் த.மோகன் உத்தரவிட்டார்.
இந்த இயற்கை முறையிலான பாரம்பரிய நெல் விதைகளை, விவசாய நிலங்களில் செயற்கை முறையில் அல்லாத, இயற்கையான உரங்களைக் கொண்டு பயிரிடுவதன் மூலம், விவசாயிகள் அதிகப்படியான மகசூல் பெற்று, பயனடைய முடியும் என, மாவட்ட ஆட்சியர் த.மோகன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ரமணன், வேளாண்மைத் துறை துணை இயக்குனர் வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- ஜோதி நரசிம்மன்