Lourd mary
Lourd mary pt desk
விவசாயம்

விவசாயிகளும் லாபம் சம்பாதிக்கலாமே! | மழைப்பொழிவு குறைந்தாலும் கிணற்றுநீரை வைத்து அசத்தும் தம்பதி!

webteam

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் குறைந்து போனது. இதனால் நன்செய் பூமியாக இருந்து கீழப்புலியூர் வேப்பந்தட்டை, அரும்பாவூர், அன்னமங்கலம், அரசலூர், தொண்டமாந்துறை போன்ற பச்சை மலையை ஒட்டிய வேளாண் பூமியெல்லாம் மக்காசோளம், பருத்தி, மரவள்ளி என படிப்படியாய் புன்செய் சாகுபடி களமாகிப் போயின.

Farming

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தாண்டு இயல்பைவிட குறைவாக பெய்த வடகிழக்கு பருவ மழையால் ஏரி குளம் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து போனது. இதனால் குறைந்த அளவிலான கிணற்று நீரில் நன்செய் சாகுபடி செய்தால் கதிர் விடும் பருவத்தில் நீரின்றி பயிர்கள் கருகிவிடும் என்றெண்ணி பலர் நிலத்தை தரிசாக போட்டு விட்டனர்.

இந்நிலையில், குறைந்த அளவு கிணற்று நீரைக் கொண்டு நெல் நாற்றங்கால் தயார் செய்து நாற்று உற்பத்தியில் இறங்கி அதிக லாபம் ஈட்டி வருகின்றனர் அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த வேளாங்கண்ணி - லூர்துமேரி தம்பதியர். முறையற்று பெய்த பருவ மழையால் நாற்றுவிட்டு நெல் நடவு செய்ய முடியாத பலர் இவரிடம் வந்து நாற்றுகளை வாங்கிச் சென்று உடனடியாக நன்செய் சாகுபடி செய்து வருகின்றனர். மக்கா சோளம், பருத்தி பயிர்கள் படைப்புழு உள்ளிட்ட பூச்சி தாக்குதலுக்குள்ளாகி 4 முறை பூச்சிக் கொல்லி மருந்து அடிப்பதால் சாகுபடி செலவு இரட்டிப்பாகிறது. கொள்முதல் விலையும் நிரந்தரமின்றி இருப்பதால் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

நாற்று

நெல்லுக்கு அரசு நிரந்தர கொள்முதல் விலை அறிவித்துள்ளதால் ஓரளவு கிணற்று பாசனம் உள்ள விவசாயிகள் மீண்டும் நன்செய் சாகுபடிக்கே திரும்பி வருகின்றனர். நெல் நடவு செய்தாலும் புன்செய் பயிர் சாகுபடி செய்தாலும் 4 மாதங்களுக்கு சாகுபடி செலவிட்டு, நீர் பாயச்சினால் மட்டுமே மகசூல் ஈட்ட முடியும். ஆனால், நாற்று தயார் செய்து விற்பனை செய்து 40 நாட்களில் ஒரு சாகுபடி பருவத்திற்கான வருவாயை நூதன முறையில் சம்பாதித்து லாபம் பார்க்கும் விவசாய தம்பதிகளாக வேளாங்கண்ணி மற்றும் லூர்து மேரியை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

வேளாண் தொழிலில் மாற்றி யோசித்தால் மாற்றம் கண்டு முன்னேறலாம் என்பதற்கு இந்த விவசாய தம்பதியர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றனர்.