விவசாயம்

பிரிமியம் கட்ட காலநீடிப்பு தேவை: விவசாயிகள் கோரிக்கை

webteam

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர்க் காப்பீட்டு தொகை பிரிமியம் கட்ட காலநீடிப்பு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகையை தராவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆறு ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு போக சம்பா சாகுபடியும் போதிய தண்ணீர் இன்றி காய்ந்து கருகின. காய்ந்த பயிர்களை கண்டு ஏராளமான விவசாயிகள் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்தனர். வரலாறு காணாத வறட்சியால் தஞ்சையும் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு வரை தேசிய பயிர்க் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு பயிர் காப்பீடு செய்து வந்த நிலையில், 2016 ஆண்டு முதல் புதிய பயிர்க் காப்பீடு திட்டம் எனக் கூறி 16 தனியார் இன்சுரன்ஸ் நிறுவனங்களிடம் பயிர்காப்பீட்டு தொகை வசூலிக்கும் வேலை வழங்கப்பட்டது. 92,000 விவசாயிகள் தஞ்சை மாவட்டத்தில் பயிர்க் காப்பீட்டு தொகை செலுத்தி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 40,000 விவசாயிகளுக்கு இதுவரை காப்பீட்டு தொகை என்பது வழங்கப்படவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.