விவசாயம்

பாரம்பரிய நெல்விதைகளை மீட்டெடுத்து சாகுபடி செய்து முன்னேற்றம்.. அசத்தும் நாகை பெண்கள்!

webteam

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பெண் விவசாயிகள் சிலர் ஒன்றிணைந்து, பாரம்பரிய நெல்விதைகளை மீட்டெடுத்து சாகுபடி செய்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக அதை மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ‘பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்து, மக்கள் நோயின்றி வாழ வழி எற்படுத்தி தரவேண்டும்’ என்ற லட்சியத்துடன் செயல்படுகின்றனர். அவர்களை பற்றி இங்கே தெரிந்துக்கொள்வோம்.

மணக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா, இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் அதே கிராமத்தைச் சேர்ந்த 50 பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் விவசாய குழுவை ஏற்படுத்தியுள்ளார். இவர்கள் இணைந்து 15 ஏக்கர் நிலத்தில் சீரக சம்பா, மிளகு சம்பா, குழிவெடிச்சான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

மேலும் இந்த அரிசிகளைக் கொண்டு அவல், கொழுக்கட்டை மாவு, இடியாப்பமாவு போன்றவற்றை செய்து விற்பனை செய்துவருவதால் நல்ல வருமானம் கிடைப்பதாக கூறுகின்றனர். சாகுபடியில் கிடைக்கும் வைக்கோலையும் மாட்டுக்கு தீவனமாக விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் இவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருள் கிடைப்பதால் பொருளாதார அளவில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

இங்கு, முற்றிலும் பெண்களே நிலத்தை உழுது விதை தெளித்து நாற்று நட்டு சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உடலுக்கு தீங்கு விளைவிக்காத மருத்துவக் குணம் கொண்ட பாரம்பரியமிக்க நூற்றுக்கும் மேற்பட்ட நெல் ரகங்களையும், இயற்கை உரங்களையும் தொழு உரங்களையும் பயன்படுத்தியும்; ரசாயண பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தாமலும் சாகுபடி செய்து வருகின்றனர் இவர்கள்.

வரும் ஆண்டுகளில் இன்னும் நூற்றுகணக்கான பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்து ஆயிரக்கணக்கான பெண்களையும் மற்றும் இளைஞர்களையும் இயற்கை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் இந்த இயற்கை விவசாய பெண்கள் செயல்பட்டு வருகின்றனர்.

அழிந்துவரும் பாரம்பரிய நெல் ரகங்ளை மீட்டெடுத்து பரம்பரிய நெல் ரகங்களை அழிவிலிருந்து காப்பதுடன் எதிர்கால தலைமுறையினர் நோயின்றி வாழ நாம் வழி எற்படுத்தி தரவேண்டும் என்ற லட்சியத்துடன் தங்களும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என செயல்படும் இந்த பெண் விவசாயிகள் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்குகின்றனர்.