விவசாயம்

நாகை: விளைச்சல் இருந்தும் விலையில்லை... வேதனையில் முல்லைப்பூ விவசாயிகள்

kaleelrahman

வேதாரண்யம் பகுதியில் முல்லைப் பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால், உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள ஆதனூர், கோவில்தாவு, கருப்பம்புலம், கைலவனம்பேட்டை, ஆயக்காரன்புலம், தகட்டூர், பஞ்சநதிகுளம், பன்னாள், உள்ளிட்ட 10 கிராமங்களில் சுமார் மூவாயிரம் ஏக்கரில் விவசாயிகள் முல்லைப்பூ சாகுபடி செய்து வருகின்றனர்

இங்கு விளையும் முல்லைப் பூக்கள், நாள்தோறும் ஏஜண்ட்டுகள் மூலம் வாகனத்தில் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் தற்போது அரசு தளர்வு அளித்துள்ளதை அடுத்து வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக கோயில் திருவிழாக்கள் நடத்த அரசு அனுமதி வழங்காததால் முல்லைப் பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த மாதம் ஒரு கிலோ முல்லைப்பூ ரூ 300 வரை விற்பனையானது. ஆனால் தற்போது முல்லைப்பூ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அதிகபட்சமாக கிலோ 100 முதல் 110 ரூபாய்க்குதான் விற்பனையாகிறது. விலை வீழ்ச்சியின் காரணமாக வேதாரண்யம் பகுதியில், முல்லைப்பூ சாகுபடி செய்து வரும் சுமார் நான்காயிரம் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.