குறைந்த நீரில் அதிக விளைச்சலும், விவசாயிகளுக்கு நல்ல வருமானமும் தரும் தோட்டக்கலை பயிர் சாகுபடியை ஊக்குவிக்க 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ், வேளாண்துறை சார்பில் சில புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். அதில், தக்காளி, வெண்டை, கத்தரி உள்ளிட்ட காய்கறி பயிர்களில் உயர் விளைச்சல் ரக சாகுபடியை 11 ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என்றார். அதேபோல், ஆயிரம் விவசாயிகளுக்கு சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் 90 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், நடப்பாண்டில் 430 வேளாண் உதவி அலுவலர் பணியிடங்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார். அடுத்ததாக, தேசிய பேரிடர் மீட்புப் படை வழியில், காவல்துறையில் தனியாக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.