விவசாயம்

குறைந்தது 'மாம்பழம்' விளைச்சல்.. எகிறும் விலை - காலநிலை மாற்றம் காரணமா? - ஒரு தொகுப்பு

Sinekadhara

காலநிலை மாற்றத்தால் மாம்பழ விளைச்சல் குறைந்தது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் பழமாக இருந்து வருகிறது. King Fruit எனப்படும் மாம்பழம் இந்தியாவில் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் மிகவும் பிரசித்தி பெற்ற அல்போன்சா வகை மாம்பழங்கள் இந்த ஆண்டு குறைந்த அளவே விளைந்துள்ளன. திடீரென பெய்த மழை, அதிக வெப்பம் போன்றவையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் விலையும் அதிகரித்துள்ளது. 60 மாம்பழங்களைக் கொண்ட ஒரு கூடை இரண்டாயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் மேற்குவங்கத்தில் வடக்கு பகுதியில் அதிக விளைச்சலை கண்டுள்ள மாம்பழம், தெற்கு பகுதியில் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு 10 லட்சம் டன் மாம்பழம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிணைந்த ஆந்திர பிரதேசத்தில் 10 லட்சம் ஏக்கர் பரப்பில், 60 லட்சம் டன் மாம்பழம் விளைவிக்கப்படுகிறது. பூச்சி தாக்கியதால், இந்த ஆண்டு சுமார் 40 விழுக்காடு வரை மாம்பழம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் வழக்கமாக 14 லட்சம் டன் வரை மாம்பழம் உற்பத்தி ஆன நிலையில், அதிக மழை காரணமாக 7 லட்சம் டன் வரை விளைச்சல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல உத்தரப்பிரதேசத்திலும் மாம்பழம் விளைச்சல் 45 லட்சம் டன்னிலிருந்து, 15 லட்சம் டன்னாக குறைவதற்கு வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.