விவசாயம்

‘தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு கடன் தரக்கூடாது’- உயர்நீதிமன்றம்

newspt

தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு விவசாயக் கடன் வழங்கக் கூடாது என்றும், மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி கருப்புப்பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரம்பிக்குளம் - ஆழியாறு இணைப்பு திட்ட கால்வாயிலிருந்து தனிப்பட்ட நபர்களான கமலம், சுபா நடராஜன் ஆகியோர் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கி, பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதார அமைப்பு ஆகியவை அளித்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி, திட்டத்தின் முன்னாள் தலைவர் கே.பரமசிவம் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தண்ணீர் சமமாக பங்கீடு செய்ய வேண்டுமெனவும், அனுமதிப் பெற்றாலும் சட்டவிரோதமாக அதிக தண்ணீர் எடுப்பதால், மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுவதாக மனுவில் மனுதாரரான கே.பரமசிவம் குறிப்பிட்டிருந்தார். மேலும் முறைகேட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை, நீர்வள அமைப்பு, மின் வாரியம் ஆகியவற்றிற்கு உத்தரவிட வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர் வளத்துறை தலைமை பொறியாளர் தரப்பில், தண்ணீர் திருட்டை தடுக்க அதிரடிப்படைகள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதிகாரிகள் வருகையை முன்கூட்டியே அறிந்து, குழாய்களை அகற்றிவிட்டு, ஆய்வு முடித்து சென்றபின் மீண்டும் தண்ணீர் திருட்டில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தண்ணீர் திருட்டு நடைபெறும் இடங்களில் மின் இணைப்பை துண்டிக்க தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உடனடியாக தகவல் அளிப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்துக்கொண்ட நீதிபதி, பின்னர் பிறப்பித்த உத்தரவில், அனுமதி பெற்று எடுப்பது மற்றும் சட்டவிரோதமாக எடுப்பது என இரு வகையில், நிலத்திலிருந்து தண்ணீர் எடுக்கப்படுவதை சுட்டிக்காட்டி, தண்ணீர் எல்லோருக்கும் பொதுவானது என்ற முறையில், அனுமதி இல்லாமல் எடுப்பது தவறு என்றும், சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக எடுப்பவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கக்கூடிய சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தண்ணீர் எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கும்போது சட்டவிதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாமல் மக்கள் பாதிக்கப்படும் நிலையில், மதிப்புமிக்க தண்ணீரை முறையாக பாதுகாக்க வேண்டும் என்றும் அரசுக்கு, நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

ஆழியாறு - பரம்பிக்குளம் திட்டத்தில் 30 ஆண்டுகளாக தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக குற்றச்சாட்டுள்ளதால், தமிழக பொதுப்பணித்துறை செயல் பொறியாளர், நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் தண்ணீர் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்றும் நீதிபதி சுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

தண்ணீர் திருட்டை தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்றும், அதை மின் வாரியத்திற்கு அனுப்பி மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுப்பணி மற்றும் நீர் வள ஆதாரத் துறைகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திருட்டு வழக்குகளில் சிக்கிய விவசாயிகளுக்கு, விவசாயக் கடன் வழங்கக்கூடாது எனவும், மானிய விலையில் உரம், விதை பெற முடியாதபடி கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் அரசுக்கு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

நீர் திருட்டில் ஈடுபடுபவர்களை துல்லியமாக கண்டுபிடிக்க ட்ரோன் கேமரா பயன்படுத்த வேண்டும் என்றும், அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுகளை அமல்படுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கு விசாரணையை ஜனவரி 25 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.