விவசாயம்

'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்

'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்

Rasus

பெரம்பலூர் அருகே பத்தாண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரியின் கரை உடைந்ததில், பல நூறு ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே ஏரி உடைந்ததற்கு காரணம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் அருகே அரசலூர் கிராமத்தில் 100 ஏக்கரருக்கு மேல் பரப்பளவு கொண்ட மூலக்காட்டு ஏரி பத்து வருடங்களுக்குப் பிறகு அண்மையில் பெய்த மழையின் காரணமாக நிரம்பி வழிந்தது.

ஏரி கரையோரம் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறு உள்வாங்கவே ஏரியின் கரை பலவீனமடைந்துள்ளது. அதனால் ஏரிகரையில் நீர் கசிவு ஏற்பட அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்துள்ளனர். அதற்கு அதிகாரிகள் ஏரிக்கரையை பலப்படுத்த போதுமான நிதி இல்லை என்று கைவிரித்துவிட்டதாக கூறுகின்றனர் அரசலூர் விவசாயிகள்.

இந்த நிலையில், நீர்கசிவு கொஞ்சம் கொஞ்சமாக கரையை அரித்து திடீரென ஏரி உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அருகில் வயலில் பயிரிடப்பட்டிருந்த நெல், மக்காச்சோளம், மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை பெருக்கெடுத்து ஓடிய ஏரி நீர் வாரிச்சுருட்டியும், மண்மேடாக்கியும் சென்றது. வெள்ளநீரில் சிக்கி இரண்டு ஆடுகள், ஒரு கன்றுக்குட்டி ஆகியவை அடித்துச்செல்லப்பட்டு பலியாகின.

விவசாய இயந்திரங்களும், இருசக்கர வாகனங்களும் அதில் அடித்துச்செல்லப்பட்டது. பயிர்களையும், தங்களின் கால்நடைகளையும் வெள்ளநீர் பலிதீர்த்தபோது செய்வதறியாது திகைத்துப்போய் நின்றுள்ளனர் பொதுமக்கள். 200 ஏக்கர் பாசனத்திற்கு இரண்டாண்டுக்கு தண்ணீர் பஞ்சம் இராது என்று நம்பியிருந்த தங்களுக்கு அதிகாரிகளின் அலட்சியம் ஆத்திரத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர் விவசாயிகள்.

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு தருவதோடு, மண்மேடாகிப்போன தங்களின் விவசாய நிலங்களை சீர்படுத்தி தரவேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இயற்கையின் கருணையால் நிரம்பிய ஏரி, அதிகாரிகளின் அலட்சியத்தால் உடைந்து போனது என்பது அவர்களின் இரக்கமற்ற தன்மையை இங்கு காட்டுகிறது எனலாம்.

இழப்பீடு தற்காலிக சோகத்தை துடைக்கலாம். ஆனால், இரண்டாடுகளுக்கு தண்ணீர் பஞ்சம் இராது என்று நம்பியிருந்த கனவு உடைந்து போனதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மைக்கு இந்த நிகழ்வை சான்றாக எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் அது மிகையல்ல.