விவசாயம்

கிருஷ்ணகிரி: "பட்டா நிலங்களை கேட்டு ஓலா நிறுவனம் அழுத்தம் கொடுக்கிறது” - விவசாயிகள் புகார்

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பட்டா நிலங்கள், வீடுகளை விற்பனைக்கு கேட்டு ஓலா நிறுவனம் அழுத்தம் தருவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாராண்டப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று ஒன்றாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், போச்சம்பள்ளி பகுதியில் கடந்த, 28 ஆண்டுகளுக்கு முன்பு 1,200 ஏக்கர் நிலங்களை சிப்காட் அமைப்பதற்காக அரசு கைப்பற்றியது. அதில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கம்பெனி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அப்பகுதியில் மீதமுள்ள நிலங்களை தங்கள் பகுதிகளைச் சேர்ந்த, 2000க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எதாரளப்பட்டி, போக்கம்பட்டி பகுதியில் உள்ள, 125 ஏக்கர் தனி நபர்களின் நிலங்கள், மற்றும் வீடுகளை ஓலா கம்பெனி காம்பவுண்ட் அமைப்பதற்காக விலைக்கு கேட்டு நிர்பந்தம் செய்கின்றனர். நில புரோக்கர்களை வைத்து ஓலா கம்பெனியின் துணை பொது மேலாளர் விலை பேசுகிறார் என தெரிவித்தனர்.

கடந்த 80 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் நாங்கள் அந்த நிலங்களை விற்க முடியாது எனக் கூறியும் நிலங்களுக்கு அதிக விலை கொடுப்பதாக கூறி நிலங்களை விற்குமாறு எங்களை வற்புறுத்துகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். தனி நபர்களுக்கு சொந்தமான நிலங்களை தனியார் கம்பெனிகள் அத்துமீறி வாங்க அதிகாரம் இல்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.