விவசாயம்

நெல், தட்டைபயறு நீங்கலாக காரிப் பயிர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை காப்பீடு செய்யலாம்: அரசு

Veeramani

நெல் மற்றும் தட்டை பயறு நீங்கலாக காரிப் பயிர்களுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை காப்பீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏப்ரல் முதல் ஜூலையில் பயிரிடப்படும் காரிப் பயிர்களான நெல் மற்றும் தட்டை பயறு நீங்கலாக மக்காசோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது. மேலும், வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, மஞ்சள், சிவப்பு மிளகாய், தக்காளி, வெண்டை, கத்தரி, முட்டைகோஸ், கேரட், பூண்டு மற்றும் இஞ்சி ஆகிய பயிர்களுக்கும் காப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-21 ஆம் ஆண்டு சம்பா நெற்பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களால் இழப்பீட்டுத் தொகை வழங்கும் பொருட்டு காப்பீட்டுக் கட்டண மானியமாக ஆயிரத்து 248 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு விவசாயிகளை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.