நாடு முழுவதும் பாரத் பந்த் அழைப்பு விடுத்து போராடிவரும் விவசாயிகளுக்கு எதிராக நடிகை கங்கனா ரனாவத் பகிந்துள்ள கவிதை சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் கடந்த 13 நாட்களாக போராடி வருகிறார்கள். இச்சட்டம், மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோது விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது, “குடியுரிமைச் சட்டத்தை யாரெல்லாம் எதிர்த்தார்களோ அவர்கள்தான் விவசாய சட்டங்களையும் எதிர்க்கிறார்கள். இந்தச் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் தீவிரவாதிகள்” என்று சர்ச்சையாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார், கங்கனா ரனாவத்.
அவரின் இந்தக் கருத்துக்கு வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. அதேபோல, விவசாயிகள் போராட்டம் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியபோது குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராளி பில்கிஸ் பனோவுக்கு பதில் வேறோரு போராளியின் புகைப்படத்தை பகிர்ந்து “இவர் குடியுரிமைச் சட்டப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 100 ரூபாய் கொடுத்தால் எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்வார்” என்றுக்கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார், கங்கனா ரனாவத்.
விவசாயிகளுக்கு எதிராக இவரின் தொடர் கருத்துகளுக்கு இப்போதுவரை பல தரப்பிலிருந்து கண்டனங்களை சந்தித்து வரும் நிலையில், மீண்டும், தனது ட்விட்டர் பக்கத்தில், விவசாயிகளில் பாரத் பந்த் போராட்டத்திற்கு எதிராக இந்தியில் கவிதை வடிவில் ஒரு பதிவிட்டிருக்கிறார்.
"வாருங்கள் இந்தியாவை முடக்குவோம்; இந்தப் படகை தாக்கவல்ல புயல்களுக்குப் பஞ்சமில்லை என்றாலும், இதில், சில துளைகளை உருவாக்க ஒரு கோடரியைக் கொண்டு வாருங்கள். இங்கே ஒவ்வொரு நாளும் நம்பிக்கை இறக்கிறது. தேசபக்தர்களிடம இந்த தேசத்தின் ஒரு பகுதியை கேட்கச் சொல்லுங்கள், வீதிகளில் இறங்குங்கள், நீங்களும் எதிர்ப்பு தெரிவியுங்கள், இந்தக் கதையை இத்துடன் மொத்தமாக முடித்துக்கொள்வோம்!" என்று கவிதை ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
இந்தக் கவிதையை ரீட்விட் செய்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.