போச்சம்பள்ளியில் கடந்த 30 வருடங்களில் இல்லாத கனமழை பெய்ததில் வயல்கள், கிணறுகள் நிரம்பியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளான போச்சம்பள்ளி, புளியம்பட்டி, திப்பனூர், களர்பதி, மத்தூர், சந்தூர், கண்ணன்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 5 மணி முதல் 7 மணி வரை இடைவிடாது கனமழை பெய்தது. காற்று இல்லாமல் பெய்த கன மழையால் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பின.
திப்பனூர் கிராமத்தில் வயல்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி குட்டை கிணறுகள் நிரம்பின. ஜிம்மாண்டியூர், கூச்சானூர், திப்பனூர் ஏரிகளில் உள்ள குட்டைகள் நிரப்பின. பெரும்பாலான வயல்களில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்திருப்பதாகவும், இது போன்று இன்னும் ஒருமழை பெய்தால் ஏரிகள் நிரம்பிவிடும் எனவும் தனது அனுபவத்தை விவசாயி ஒருவர் தெரிவித்தார்.