ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது அந்த நாட்டில் விவசாயம் எந்த அளவுக்கு மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பொறுத்தது. இதற்கு வேளாண் நிலப்பரப்பு அதிக அளவில் இருக்க வேண்டும். உலக அளவில் வேளாண் நிலப்பரப்பு எந்த அளவில் இருக்கிறது என்பதைப் பற்றி இப்பகுதியில் பார்க்கலாம்.
உலக அளவில் வேளாண் நிலப்பரப்பின் சராசரி 10இலிருந்து 14 விழுக்காடாக இருக்கிறது. இதில் ஆசிய கண்டம்தான் வேளாண் நிலப்பரப்பை அதிகம் கொண்டிருக்கிறது. ஆசியாவின் சராசரி 33 புள்ளி 8 விழுக்காடு ஆகும். இந்தப் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடுகளைப் பொறுத்தவரை இந்தப் பட்டியலில் வங்கதேசம் முதல் இடத்தில் இருக்கிறது. வங்கதேசம் 60 புள்ளி 6 விழுக்காடு வேளாண் நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறது.
இரண்டாம் இடத்தில் டென்மார்க் இருக்கிறது. டென்மார்க் தனது நிலப்பரப்பில் 59 புள்ளி ஒன்று விழுக்காடு வேளாண் நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் இதுதான் அதிகம்.
மூன்றாம் இடத்தில் இரண்டு நாடுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று, தற்போது போரால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன். 56 புள்ளி 8 விழுக்காடு வேளாண் நிலப்பரப்பை உக்ரைன் கொண்டிருக்கிறது. மூன்றாம் இடத்தில் உள்ள மற்றொரு நாடு கிழக்கு ஐரோப்பிய நாடான மோல்டோவா. இதன் வேளாண் நிலப்பரப்பு 56 புள்ளி 8 விழுக்காடு ஆகும்.
இந்தப் பட்டியலில் 5ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் வேளாண் நிலப்பரப்பு 51 புள்ளி 8 விழுக்காடாக இருக்கிறது. ஆனால், உலகின் மிகப் பெரிய விவசாய நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.