விவசாயம்

ஓமலூர் : சிறுதானியம் பயிர் செய்வதற்கான விவசாயிகள் பயிற்சி முகாம்

நிவேதா ஜெகராஜா

ஓமலூர் வட்டாரத்தில் சிறுதானியம் பயிர் செய்வதற்கான விவசாயிகள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், நுண்ணீர் பாசனம் மூலம் சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் முறைகள் மற்றும் பலன்கள் குறித்து வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டார வேளாண்மை துறை சார்பில் சிறுகுறு விவசாயிகளுக்கு சிறுதானியம் சாகுபடி செய்வது குறித்து ஒவ்வொரு கிராமமாக சென்று அதிகாரிகள் பயிற்சிகள் அளித்து வருகின்றனர். எஸ்.செட்டிபட்டி கிராமத்தில் உள்ள சிறுகுறு விவசாயிகளுக்கு சிறு தானியத்தில் நுண்ணீர் பாசனம் செய்தல் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கம்பு, சோளம், ராகி, திணை, சாமை ஆகிய பயிர்கள், கால்நடைகளுக்கான தீவன நாட்டு சோளப்பயிர் ஆகியவற்றிற்கு தெளிப்பு நீர் பாசனம் அமைத்து அதிகளவில் சாகுபடி செய்யலாம்.

மானாவாரி நிலத்தில் நீர் பாசன கருவிகளை அமைத்து வருடம் முழுக்க தானியங்கள் சாகுபடி செய்வதற்கான உதவிகள், செய்யபட்டு வருகிறது. அதேபோல சிறுகுறு விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பசன கருவிகள் வழங்கபடுகிறது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். சிறு தானியங்களில் நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் எளிதாக கிடைக்கிறது. சிறுதானிய உணவில் உடலுக்கு எந்தவித உபாதைகளும் ஏற்படாது.

சிறுதானிய உணவு எலும்புகளை பலப்படுத்தி, சமச்சீரான சத்துக்களை கொடுப்பதால், மக்கள் அதிகளவில் சிறுதானிய உணவை சாப்பிட்டு வருகின்றனர். அதனால், சிறுதானியங்களின் விற்பனை அதிகரித்து, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் கூடுதல் லாபம் கிடைக்கிறது. அதனால், சிறுகுறு விவசாயிகள் ராகி, கம்பு, சோளம், திணை, சாமை, குதிரைவாளி ஆகியவற்றை சாகுபடி செய்து பயனடையுமாறு வேளாண்மை துறை அதிகாரிகள் பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.