விவசாயம்

மரவள்ளிக்கிழங்கில் மாவுப்பூச்சி தாக்குதல்: பயிர்கள் கருகியதாக விவசாயிகள் கவலை

Sinekadhara

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், மாவுபூச்சித் தாக்குதல் காரணமாக, மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் கருகி சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள நாமகிரிபேட்டை, மெட்டாலா, வெள்ளகள்பட்டி, உரம்பு, முள்ளுக்குறிச்சி, நாரைகிணறு, பல்லவநாயக்கன்பட்டி, குட்லாடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மாவுபூச்சி தாக்குதல் காரணமாக மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் முற்றிலும் காய்ந்து கருகி நாசமாகி வருகிறது. விவசாயிகள் தொடர்ந்து மாவுபூச்சை கட்டுப்படுத்த மருந்துகள் அடித்தும் பலன் அளிக்கவில்லை. மேலும் வேளாண்துறை அதிகாரிகள் மாற்றுபூச்சி மூலம் மாவுபூச்சியை கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கடும் வெயிலின் காரணமாகவே பூச்சி வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவு செய்து மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டது. தற்போது மாவுபூச்சி தாக்குதல் காரணமாக முற்றிலும் காய்ந்து நாசமாகி வருகிறது. இதனைக் கட்டுப்பட்டுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு நஷ்டம் அடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.