விவசாயம்

திருவாரூர்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை காக்க விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள்

Sinekadhara

திருவாரூர் மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் பயிர்களுக்கு உரங்கள், நுண்ணூட்டங்கள், பூச்சி மருந்துகள் முதலானவற்றைத் தெளித்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா தாளடி பயிர்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தன. தற்போது கடந்த சில தினங்களாக நல்ல வெயில் அடிப்பதால் பல்வேறு இடங்களில் வயல்வெளிகளில் நீர் வடிந்து பயிர்கள் தெரிய ஆரம்பித்து உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழையால் பாதிக்கப்பட்டிருந்த பயிர்கள் நல்ல வளர்ச்சி மற்றும் விளைச்சலைக் கொடுக்கவும், அந்தப் பயிர்கள் முழுமையாக காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவும், அதற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக விவசாயிகள் பூச்சி மருந்துகள், உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்களை பயிர்களுக்கு அளித்து வருகின்றனர்.

தமிழக அரசு தற்போது சம்பா தாளடி முழுமையாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 6000 ரூபாய் இடுபொருள் உரங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் பகுதியளவு பாதிக்கப்பட்ட பயிர்கள், வயல்வெளிகளுக்கும் மானியத்தில் அல்லது குறைந்த விலையில் இடுபொருட்கள், உரங்கள், நுண்ணூட்டங்கள் வழங்கி பயிர்களை காப்பாற்ற வழிவகை செய்யவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர் விவசாயிகள். 

மேலும், யூரியா உள்ளிட்ட முக்கியமான உரங்களை விவசாயிகள் உரக்கடைகளில் வாங்கும்போது இடுபொருட்கள் வாங்கினால்தான் உரம் என்று கடைக்காரர்கள் சொல்லும் நிலை தொடர்ந்து வருகிறது. திருவாரூர் மாவட்ட வேளாண்மைத்துறை, அதுபோல் செயல்படும் பல கடைகளுக்கு ஒரு வாரம் விற்பனை செய்ய தடைவிதித்தது. மேலும் அவ்வாறு தொடர்ந்து செயல்பட்டால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கூறியிருந்தது. எனவே வேளாண்மைத்துறை துரிதமாக செயல்பட்டு அவ்வாறு நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். 

இதுகுறித்து உரக்கடைகள் மற்றும் அவை மொத்தமாக உரங்கள் வாங்கும் டீலர்கள் ஆகியோரிடம் கேட்டபோது, யூரியா உள்ளிட்ட முக்கியமான உரங்களை கம்பெனிகளில் இருந்து வாங்கும்போது, அந்த கம்பெனிகள் யூரியா உள்ளிட்ட முக்கியமான உரங்களோடு கூடுதலாக சிலப் பொருட்களையும் எங்களிடம் விற்றுவிடுகிறார்கள். அதனை நாங்கள் உரக்கடைகளிடம் விற்கிறோம், உரக்கடைக்காரர்கள் விவசாயிகளிடம் விற்கிறார்கள் என்கின்றனர். மேலும் வேளாண்மைத்துறை உரக்கடைகளுக்கு அபராதம் விதிப்பது, தடைசெய்வது என இல்லாமல் உரங்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகளிடம் உர விற்பனையாளர்கள் கேட்கக்கூடிய உரங்களை மட்டும் கொடுத்தால் இந்த பிரச்னை வராது என்றும் தெரிவித்தனர்.