விவசாயம்

வேளாண் பட்ஜெட்: முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமான அரியலூர் மாவட்டம் - விவசாயிகள் மகிழ்ச்சி

நிவேதா ஜெகராஜா
புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக அரியலூர் மாவட்டத்தை முருங்கை ஏற்றுமதி மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கடந்த 27-ஆம் தேதி புதிய தலைமுறையில், 1 கிலோ 2 ரூபாய்க்கு விற்பனை ஆகும் முருங்கை என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில், 'அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் அதை சுற்றியுள்ள காரைக்குறிச்சி, வேணாநல்லூர், இருகையூர், பாண்டிபஜார், நடுவலூர், கோட்டியால், சுத்தமல்லி, வெண்மான்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோட்டார் பாசனம் மூலம் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயம் செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் நிலக்கடலை சாகுபடி துவங்கியது. அப்போது அதன் வரப்புகளில் ஊடுபயிராக முருங்கை சாகுபடி விதை விதைப்பதும் நடந்தது. இந்நிலையில் தற்போது மூன்று மாதங்களில் கடலை அறுவடை செய்யப்பட்ட நிலையில், ஊடு பயிராக விதைத்து செய்திருந்த முருங்கை தற்போது காய்க்க தொடங்கி உள்ளது. இந்த முருங்கை  நல்ல காய்த்து வரும் நிலையில் அதன் விலை பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. குறைந்தது 5 ரூபாயிலிருந்து 12 ரூபாய் வரையும், அதிகபட்ச விலையாக 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு மிகவும் மோசமான விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இடைத்தரகர்கள்.
இதைத்தொடர்ந்து நெல், கரும்பு, கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு ஆதரவு விலை உள்ளதுபோல் முருங்கைக்கு ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விவசாயிகளும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்து, அந்த செய்தியில் தகவல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று தமிழக அரசு வேளாண் நிதிநிலையில் அரியலூர் மாவட்டமும், முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முருங்கை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.