விவசாயம்

உப்பூர் அனல் மின் நிலையத்துக்காக நில கையக முயற்சி... முதல்வரை சந்திக்க விவசாயிகள் திட்டம்

webteam

உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிக்கு, அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதுவும் தற்போது தோல்வியில் முடிந்துள்ளது.

ராமநாதபுரம் அருகே உப்பூர் அனல் மின் நிலையத்தில், 800 மெகாவாட் உற்பத்தி திறனுடைய இரு அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி அப்பகுதி மக்கள் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். அதன் விசாரணையில் உப்பூர் அனல் மின் நிலையம் பணிகள் நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அப்போதைய தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, மீண்டும் பணிகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட வழிவகுத்தது. அந்த உத்தரவின் பேரில் தற்போது அங்கு அனல் மின் நிலையப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, உப்பூர் அனல் மின் நிலைய விரிவாக்க பணிக்காக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்துவதற்கு அரசு முயல்வதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் ‘நிலத்திற்குரிய பணத்தைப் பெற்றுக் கொண்டு, அதன் உரிமங்களை உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு ஒப்படையுங்கள்’ என நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதைக்கண்ட அப்பகுதி விவசாயிகள், ‘இந்த நிலம்தான் எங்கள் வாழ்வாதாரம்’ எனக்கூறி தங்கள் நிலத்தை ஒப்படைக்க முடியாது என உறுதியாக இருந்துள்ளனர். விவசாயிகள் யாரும் நிலத்தை கொடுக்க முன்வராத காரணத்தினால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் உப்பூர் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்கள் அடங்கிய பேச்சுவார்த்தை நடந்தது.

அந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உடன்பாடு ஏற்படாததால், பேச்சுவார்தையில் இருந்து அவர்கள் வெளியேறி உள்ளனர். இது சம்பந்தமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்கள் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.