கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கும்மனூர் கிராமத்தையொட்டி செல்லும் தென்பெண்ணை ஆற்றின்கரையோரம் கும்மனூர், அம்மனேரி, கூளியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிளைச் சேர்ந்த விவசாயிகள் நெல் சாகுபடி செய்துவருகின்றனர். இவர்கள் தென்பெண்னை ஆற்றினை கடந்து சென்றுதான் விவசாயம் செய்யவேண்டும். ஆற்றில் தண்ணீர் செல்லாத நாட்களிலோ அல்லது குறைந்த அளவு தண்ணீர் சென்றாலோ பிரச்னை இல்லை. ஆனால் அதிகமாக தண்ணீர் செல்லும் காலத்தில், ஆற்றை கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
தற்போது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் நாற்றுகளை தலையில் சுமந்தவாறு, கழுத்தளவு நீரில் நீந்தியபடி அக்கரைக்கு சென்று நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயம் மட்டுமே வாழ்வாதாரம் என்ற சூழலில் ஆபத்து இருந்தாலும் ஆற்றைக் கடக்கவேண்டிய காட்டாயத்தில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் இருபோகம் சாகுபடி நடைபெறும் நிலையில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.