திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை வழங்குவதில் குளறுபடிகள் நிகழ்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
காவிரியில் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாததால் திருவாரூர் மாவட்டத்தில் முப்போக சாகுபடி பொய்த்து ஒரு போக சாகுபடி மட்டுமே நடைபெறுகிறது. இந்நிலையில், அரசு வழங்கும் மானியம், பயிர்காப்பீட்டுத் தொகை உள்ளிட்டவைகள், மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ப்ரீமியம் தொகை 375 ரூபாய் செலுத்தியும், 2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்காப்பீடுத் தொகை வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவிக்கும் விவசாயிகள், குன்னியூர், இலையூர், ரகுநாதபுரம், கீழபாலையூர், கழனிவாசல், உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மட்டும் அதிகாரிகள் பயிர்காப்பீடுத் தொகை வழங்காமல் காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டுகின்றனர்.
விவசாயிகளின் புகார்கள் தொடர்பாக விளக்கம் அளித்த மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மயில்வாகனன், திருவாரூர் மாவட்டத்தில் 25 கிராமங்களுக்கு மட்டும் பயிர்காப்பீடுத் தொகை வழங்கவில்லை என்றும், விரைவில் தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.