விவசாயம்

பயிர் காப்பீடாக ரூ.5-க்கு செக்: சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திமுக...!

பயிர் காப்பீடாக ரூ.5-க்கு செக்: சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திமுக...!

Rasus

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடாக ரூ.3, ரூ.4, ரூ.5, ரூ.10-க்கு காசோலை வழங்கப்பட்டுள்ளதை திமுக சட்டப்பேரவையில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது.

மழை பொழிவு குறைவு, பயிர் கருகுதல் உள்ளிட்ட நேரங்களில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். இதனிடையே  பயிர் பயிர் காப்பீடு இழப்பீடாக ரூ.3, ரூ.4, ரூ.5, ரூ.10-க்கு காசோலை வழங்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி நேற்று எழுப்பினார். அப்போது விவசாயிகளுக்கு இழப்பீடாக கொடுக்கப்பட்ட ரூ.3, ரூ.4, ரூ.5, ரூ.10-க்கான காசோலையாக அவர் ஆதாரத்துடன் கொண்டுவந்து பேசினார். சட்டப்பேரவையில் பேசிய அவர், “ விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள காசோலையின் தொகையை பெற வேண்டும் என்றால் விவசாயி வங்கி கணக்கை திறக்க வேண்டும். வங்கி கணக்கு திறப்பதற்கு குறைந்தப்பட்சம் ரூபாய் 500 செலவாகிறது. ஆனால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடாக ரூபாய் 10 வழங்கப்படுகிறது” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர்கள் சில இடங்களில் இந்த பிரச்னை இருப்பதாக ஒப்புக்கொண்டனர். அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, திண்டுக்கல் நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளிடம் இருந்து இதுபோன்ற புகார்கள் வந்துள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர் என்றார். அமைச்சர் துரைக்கண்ணு பேசும்போது, இந்த பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என்றார். பயிர் காப்பீடு தொகை வழங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.