மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளை ஆதரித்த பிரபல பாடகர் தில்ஜித் தோசன்ஜியை விமர்சித்து கங்கனா ரனாவத் செய்த ட்விட்டிற்கு தில்ஜித் நையாண்டியுடன் பதில் அளித்துயுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 20 மற்றும் 22 ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களை திருப்பப் பெறக்கோரி விவசாயிகள் கடந்த 17 நாட்களாக போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்தையும் ஆதரவு தெரிவிப்பவர்களையும் நடிகை கங்கனா ரனாவத் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.
பஞ்சாபின் பிரபல பாடகர் தில்ஜித் தோசன்ஜி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு போராட்டக் களத்திலும் கலந்துகொண்டு ”நீங்கள் பெரிய வரலாற்றை உருவாக்குகிறீர்கள். இந்த வரலாறு எதிர்கால சந்ததியினருக்கு விவரிக்கப்படும். விவசாயிகளின் பிரச்சனைகள் யாராலும் திசை திருப்பப்படக்கூடாது. விவசாயிகளின் பிரச்சனைகளை அரசு தீர்க்கவேண்டும்” என்று பேசியது பரபரப்பானது. விவசாயிகளுக்கு குரல் கொடுத்தது மட்டுமல்லாமல் 1 கோடி ரூபாய் டெல்லி குளிருக்கு விவசாயிகள் போர்வை வாங்கிக்கொள்ளவும் நிதியுதவி அளித்தார் தில்ஜித்.
இதனால், தொடர்ச்சியாக தில்ஜித்தை தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டு வந்த நடிகை கங்கனா ரனாவத் நேற்று தனது மூன்று புகைப்படங்களை பகிர்ந்து “இன்று நான் 12 மணிநேர படப்பிடிப்பிற்குப் பிறகு ஒரு தொண்டு நிறுவனத்தின் விழாவில் கலந்துகொண்டேன். இந்த மஞ்சள் நிற உடையில் நான் எப்படி இருக்கிறேன். தில்ஜித் எங்கே? அவரை எல்லோரும் தேடுகிறார்கள்?” என்ற ஹாஷ்டேக்கில் பதிவிட்டிருந்தார். இந்த ஹாஷ்டேக்கில் நேற்று முழுக்க நெட்டிசன்கள் கருத்திட்டு வந்தார்கள்.
கங்கனாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கூலாக நையாண்டியுடன் “நான் காலையில் எழுந்து ஜிம்மிற்கு சென்றேன். நாள் முழுவதும் வேலை செய்தேன். இப்போது, தூங்கப்போகிறேன்” என்று தில்ஜித் அளித்தப் பதில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. கங்கனாவின் ட்விட்டை விட தில்ஜித்தின் ட்விட்டிற்குதான் அதிக லைக்ஸ்கள் கிடைத்திருக்கின்றன. அவரின் இந்த பதிலடிக்குப் பிறகு கங்கனா இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.